அட்டலுகமவில் சுகாதார வல்லுநர்கள் தமது சேவையை வழங்க மறுத்தால் வீடுகளில் மக்கள் இறக்கும் நிலை ஏற்படும் : GMOA

பண்டாரகமவின் அட்டலுகமவில் பொதுச்சுகாதார அதிகாரி ஒருவரின் முகத்தில் கொவிட்-19 நோயாளி ஒருவர் துப்பிய சம்பவத்துக்குப் பிறகு அப்பகுதி மக்களுக்கு சுகாதார வல்லுநர்கள் தமது சேவைகளை எதிர்காலத்தில் வழங்குவது குறித்து மிகவும் தீவிரமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களிடம் உரையாற்றிய அச்சங்கத்தின் ஆசிரியர் மருத்துவர் ஹரித அலுத்கே, முன்னைய சந்தர்ப்பங்களில் கூட அட்டலுகம கிராம மக்கள் பிசிஆர் சோதனைகளை நடத்த ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இது போன்ற சூழ்நிலையில் இப்பிரதேச மக்களுக்கு சேவைகளை வழங்குவது சுகாதார அதிகாரிகளுக்கு பாதுகாப்பானதல்ல என அவர் கூறினார்.

எனவே எங்கள் சுகாதார அதிகாரிகளை ஆபத்தில் சிக்கவிட முடியாது. இந்தத் தவறான நடத்தை ஏனைய கிராமத்தவர்களையும் ஆபத்தில் ஆழ்த்தும். அக்கிராமத்தின் குறித்த நபருக்கு எதிராகவோ சுகாதார அதிகாரிகளுக்கு ஆதரவாகவோ எவரும் பேசவில்லை. அவர்கள் தங்கள் சமூகத் தலைவர்களுக்குக்கூட செவிசாய்க்கவில்லை என மருத்துவர் அலுத்கே கூறினார்.

சுகாதார சேவைகள் தங்கள் உதவியை வழங்க மறுத்தால் அட்டலுகமவிலுள்ள மக்கள் வீட்டில் ஒருவர் பின் ஒருவராக இறப்பர்.

இதேவேளை பொதுச் சுகாதார அதிகாரி ஒரு தொற்றாளரை சிகிச்சை நிலையத்துக்கு மாற்றுவதற்கு அங்கு சென்ற போது அவர் ஒத்துழைக்க மறுத்துவிட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

இவ்வாறான நபர்கள் மீது பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பர் என்றும் அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply