மஹர சிறைச்சாலையின் உயிரிழந்த கைதிகளின் உடல்கள் தொடர்பான தீர்ப்பு தொடர்ந்தும் ஒத்திவைப்பு

மஹர சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிகளின் சடலங்கள் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பு தொடர்ந்தும் பிற்போடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வத்தளை நீதவான் புத்திக்க சீ ராகல முன்னிலையில் இந்த வழக்கு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உயிரிழந்த சிறைக் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், அதற்குரிய சட்டத்திற்கேற்ப கைதிகளின் சடலங்களை எரிப்பதை தவிர்க்குமாறு வலியுறுத்தி கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு நீதிமன்றத்தை நாடியுள்ளது.

சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தொற்று ஒழிப்பு விதிமுறைகளுக்கமைய உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைப்பது தொடர்பில் சட்ட சிக்கல் காணப்படுவதாக தெரிவித்து ராகம வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள், வத்தளை நீதவான் புத்திக சீ ராகலவுக்கு இன்று அறிவித்தனர்.

எனினும் கைதிகளின் சடலங்களை எரித்தால் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதுடன், குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தப்பிப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர், சட்டத்தரணி சேனக பெரேரா விடயங்களை முன்வைத்தார்.

சுகாதார விதிமுறைகள் COVID – 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரை எரிப்பதற்கான கட்டளைச்சட்டம் சாதாரண நிலைமையின் போது அமுல்படுத்தப்பட்டாலும் கொலை குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் இந்த கட்டளை சட்டத்தை அமுல்படுத்த முடியுமா என சட்டத்தரணி சேனக பெரேரா நீதிமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

வழக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் ராகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply