“விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும்” எனக் கூறிய விஜயகலாவுக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

“இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்” என்ற சர்ச்சைக்குரிய கருத்தை கூட்டமொன்றில் வைத்து கூறியமைக்காக விஜயகலா மகேஸ்வரன் மீது தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் நிஹார் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதவான் குறித்த வழக்கை மார்ச் 19ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 02ஆஅம் திகதி யாழ்ப்பாணம், வீரசிங்க மண்டபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் “யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் விடுதலைப்புலிகள் காலத்தில் இடம்பெறவில்லை என்றும், பெண்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டுமென்ற” கருத்துப்படவும் உரையாற்றியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு அவரிடம் வாக்குமூலம் பெற்றதோடு, 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 08ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டு பின்னர் அன்றைய தினமே பிணையிலும் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அவர் தெரிவித்த குறித்த கருத்து தொடர்பில் திட்டமிட்ட குற்றத் தடுப்புப் பிரிவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply