மஹர சிறைச்சாலை அமைதியின்மை தொடர்பில் CID விசாரணைகள் ஆரம்பம்

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் இன்று (01) விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்கிய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அமைதியின்மையில் உயிரிழந்த கைதிகளின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.

சடலங்கள் தொடர்பிலான நீதவான் விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்பின்னர், பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

காயமடைந்த கைதிகளில் நால்வரின் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளதாகவும் அவர்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், சிகிச்சை பெற்றுவரும் கைதிகளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் மாலை அமைதியின்மை ஏற்பட்டது.

இதன்போது, சில கைதிகள் கதவை உடைத்துக் கொண்டு தப்பிச்செல்ல முயற்சித்தமையினால் குழப்பநிலை மேலும் அதிகரித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் சிறைச்சாலை அதிகாரிகளினால் அதிகாரம் பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மோதலில் ஈடுபட்ட கைதிகளினால் சிறைச்சாலையின் சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்டது.

தீயினால் சிறைச்சாலையின் மருத்துவகூடம் மற்றும் களஞ்சியசாலை என்பனவற்றுக்கு பாரிய சேதமேற்பட்டுள்ளது.

இதனிடையே, மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நீதியமைச்சர் அலி சப்ரியினால் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நீதியமைச்சின் மேலதிக செயலாளர் ரோஹண சப்புகஸ்வத்த, ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வா, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply