கொரோனா உயிரிழப்பு வலியை விடவும், உடல்களை எரிப்பதே முஸ்லிம் சமூகத்துக்கு பெரும் வலியாக உள்ளது – முஷாரப் எம்.பி

இனவாதிகள் என்பவர்கள் அரசியல்வாதிகளாக மட்டும் இருக்க வேண்டுமென்பதில்லை. அதிகாரிகளாகவும் இருக்கலாம் என்பதற்கு விசேட வைத்தியர் குழுவின் சில உறுப்பினர்கள் உதாரணமாகவுள்ளனர்.

அத்துடன் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் நியமிக்கப்ட்டுள்ள நிபுணர்குழு உலக சுகாதார ஸ்தாபனத்திலுள்ள நிபுணர்களை விடவும் சிறந்த நிபுணர்களா கேட்கிறேன் என அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

“அத்துடன் இனவாதம் என்பது ஒரு தேர்தலை வெற்றி கொள்ள நமக்கு வாய்ப்பாக அமையலாம் . ஆனால் இனவாதம் என்பது ஒரு நாட்டை வளர்ச்சியடையச் செய்ய ஒருபோதும் பங்களிக்காது என்ற யதார்த்தத்தை இந்த சபையிலுள்ள சகல உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

பல்வேறு நிபுணர்களைக்கொண்ட உலக சுகாதார ஸ்தாபனம் ,யுனெஸ் கோ போன்ற அமைப்புக்கள் தொழில்நுட்ப விடயத்தில் உலகுக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்கள் தொடர்பிலும் வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளபோதும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இலங்கையில் எரிக்கப்படும் விடயம் பெரும் துயரமாக மாறியுள்ளது.

இலங்கையில் முஸ்லிம்கள் இவ்வாறு நல்லடக்கம் செய்யப்படாமல் எரிக்கப்படுவதன் பின்னணியில் அரசின் சுகாதாரத் துறையினால் ஒழுங்கமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பிழையான வழிகாட்டுதல்களினால் தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தின் மத,கலாசார நம்பிக்கைகள் அனைத்துமு் சிதைந்து சென்று கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகம் கொரோனா பாதிப்பால் இரட்டிப்பு பாதிப்பை அடைந்து கொண்டிருக்கின்றது என்பதை இந்த அரசில் உள்ளவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

இந்த கொரோனா தாக்கத்தினால் ஏற்படுகின்ற இறப்பை விடவும் இறந்த உடல்களை எரிப்பதனால் வருகின்ற வலி முஸ்லி ம் சமூகத்திற்கு பெரும் வலியாக உள்ளது” என்றார்.

Be the first to comment

Leave a Reply