கூரைத்தகடுகள் விநியோக வழக்கிலிருந்து பசில் உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு

கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்தது.

திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2,991 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி பயனாளிகளுக்கு கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை உள்ளிட்ட 05 குற்றச்சாட்டுகளின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2014 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாள் ஒன்றில் பொதுச்சொத்துக்கள் சட்டத்தை மீறும் வகையில் இந்த நிதியை தவறாக கையாண்டமை மற்றும் அதற்கு உடந்தையாக செயற்பட்டமை தொடர்பில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த வழக்கின் பிரதிவாதிகள் தரப்பு சாட்சி விசாரணைகள் இன்றி நான்கு பிரதிவாதிகளையும் விடுவித்து விடுதலை செய்வதற்கு மேல் நீதிமன்ற நீதிபதி ரத்னப்பிரிய குருசிங்க இன்று உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ரஜபக்ஸ, அந்த அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க, அதன் முன்னாள் பிரதி பணிப்பாளர் நாயகம் கே.ஏ.திலக்கசிறி ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply