வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு காலநிலை நிலவரம் தொடர்பான விசேட அறிவிப்பு

இலங்கையின் தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் இன்று காலை(28.11.2020) புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணித்தியாலத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
தற்போது தாழ்வுநிலையாக காணப்படும் இது புயலாக வலுப்பெறுமா என்பதனை அடுத்த 72 மணித்தியாலத்தின் பின்னரே உறுதியாக கூற முடியும்.
பொதுவாக கடற்பகுதியில் தோன்றும் தாழமுக்கங்கள் கடல் மேற்பரப்பு வெப்பநிலை (Sea surface temperature- SST)அதிகரிப்பினால் தோன்றுவதாகும். இவை தாழமுக்க நிலையிலிருந்து புயலாக மாறுவதற்கு கடல் மேற்பரப்பு வெப்பநிலையின் அதிகரிப்பு, வளிமண்டல அமுக்க குறைவு, தாழமுக்க மையத்திலிருந்து வெப்பக்காற்றின் வெளிச்செல்லுகையும் ஈரப்பதன் நிறைந்த காற்றின் உள்வருகையும், கொந்தளிப்பான காற்று( Turbulent Wind) மற்றும் அதன் இயக்கத்திற்கு தேவையான மறை வெப்ப சக்தியின்( Latent Heat) கிடைப்பனவு போன்றன அவசியமாகும்.
தற்போது வங்காள விரிகுடாவில் தோன்றியுள்ள தாழமுக்கத்தின் இன்றைய நிலையைப் பொறுத்தவரை அது புயலாக மாறி நகர்ந்தாலும் அல்லது தாழமுக்கமாக நகர்ந்தாலும் வடக்கு மாகாணத்தினை ஊடறுத்தே நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தாழமுக்கம் புயலாக மாறாவிட்டாலும் எமக்கு கன மழையைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலதிக விபரங்கள் தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும்.

  • நாகமுத்து பிரதீபராஜா-

Be the first to comment

Leave a Reply