கஜேந்திரகுமாருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – தாக்கல் செய்தார் மணிவண்ணன்

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்த வழக்கை தன் சார்பில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை டிசெம்பர் 18ஆம் திகதி அழைக்கப்படும் எனத் தவணையிட்ட யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம், பிரதிவாதிகளை மன்றில் முன்னிலையாக அறிவித்தல் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தம்மை நீக்கியதற்கு தடை விதித்து உத்தரவிடக் கோரி, சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம், அவரை உறுப்புரிமையில் நீக்கியதற்கு இடைக்காலத் தடை கட்டளையை வழங்கி அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு உத்தரவிட்டது.

அதனால் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீடிக்க வழிசமைக்கப்பட்டது. எனினும் இந்த உத்தரவை மதிக்காது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தம்மை அந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநகரசபை நடவடிக்கைகளில் செயற்படமுடியாது என்று மாநகர சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் என்று மனுதாரர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply