இன்று மாவீரர்தினம்: மாலை 6.05க்கு விளக்கேற்றல்

தமிழ் மக்களின் விடிவிற்காக போராடி மரணமடைந்தவர்களை நினைவுகூரும் நாள். உலகெங்கும் தமிழர்கள் பரந்து வாழும் இடங்களில் மாலை அஞ்சலி செலுத்த தயாராகி வருகிறார்கள்.

தமிழர் தாயகத்தில் அஞ்சலி நிகழ்வுகளிற்கு நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன. இதனால் வீடுகளில் இருந்து அஞ்சலி செலுத்துமாறு தமிழ் தேசிய கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

ஒவ்வொரு வீட்டிலும் மாலை 6.05 மணிக்கு தீபமேற்றி அஞ்சலி செலுத்துமாறு, தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முதல் மாவீரரான சஙகர் (செ.சத்தியநாதன்) மரணமடைந்த நாளை மாவீரர்தினமாக புலிகள் பிரகடனப்படுத்தியிருந்தனர். 1982ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வயிற்றில் காயமடைந்த நிலையில், தமிழகத்திற்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி 27.11.1982ஆம் ஆண்டு மாலை 6.05 மணிக்கு மரணமடைந்தார்.

அவரது உடல் தமிழகத்தில் புதைக்கப்பட்டது.

1989ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் முதலாவது மாவீரர்தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.

தமது அமைப்பிலிருந்து மரணமடைந்தவர்கள் பற்றிய விபரங்களை ஆவணப்படுத்தி வைத்திருந்தனர். இதன்படி, 2009 ஆம் ஆண்டின் ஆரம்ப கட்டம் வரை சுமார் 42,000 போராளிகள் வரை மரணமடைந்ததாக ஆவணப்படுத்தினர்.

யுத்தத்தின் பின்னர் பல துயிலுமில்லங்கள் இராணுவ பிடியில் உள்ளன. ஏனைய பகுதிகளில் நெருக்குவாரங்களின் மத்தியில் மாவீரர்தினம் அனுட்டிக்கப்பட்டு வந்தது.

எனினும், இம்முறை மாவீரர்தினத்திற்கு நீதிமன்றங்கள் ஊடாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாலை 6.05 மணிக்கு வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துமாறு, தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

இதுதவிர, புலம்பெயர் தேசங்களில் பேரெழுச்சியுடன் மாவீரர் நினைவஞ்சலி ஏற்படாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply