பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஒளிரவிட்டுள்ள தமிழீழத்தின் தேசிய மலரான கார்த்திகை பூ!

தமிழீழத்தின் தேசிய மலரான கார்த்திகை பூ மத்திய லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஒளிரவிட்டுள்ளது.

உலகமெங்கும் பரந்து வாழ்கின்ற தமிழர்கள் நவம்பர் 27ஆம் திகதியன்று தமிழீழ விடுதலைக்காக போராடிய மாவீரர்களை நினைவு கூர்வது வழமையாகும். அந்த வகையில் இங்கிலாந்தில் நடைபெறுகின்ற நினைவேந்தல் நிகழ்வில் வருடாந்தம் 10,000ற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து அஞ்சலி செலுத்துவது வழமையானது. இவ்வருடம் கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஏற்பட்ட கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தமிழ் அஞ்சலி நிகழ்வுகளை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக தமிழீழத்தின் தேசிய மலரான கார்த்திகை பூவை, மத்திய லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ஒளிரவிட்டுள்ளனர்.

பிரித்தானியா வாழ் தமிழ் செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முயற்சியில் நாடாளுமன்ற கட்டிட தொகுதியின் சுவற்றினில் கார்த்திகை பூவின் உருவத்தையும், “நாங்கள் நினைவில் கொள்கிறோம்” மற்றும் “இலங்கையின் இனப்படுகொலையிலிருந்து விடுதலைக்காக போராடிய வீரர்களையும் நாங்கள் நினைவில் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கின்ற வாசகங்கள் மின் விளக்குகள் என்பன ஒளிரவிடப்பட்டுள்ளன.

Be the first to comment

Leave a Reply