லங்கா ப்ரீமியர் லீக்: முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றி

லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய முதல் போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணியை கொழும்பு கிங்ஸ் அணி சுப்பர் ஓவரில் வெற்றிகொண்டது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 20 ஓவர்களில் 03 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்களைப் பெற்றது.

அணித்தலைவர் குசல் ஜனித் பெரேரா 87 ஓட்டங்களையும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Rahmanullah Gurbaz 53 ஓட்டங்களையும் பெற்றனர்.

அசேல குணரத்ன ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்றார்.

220 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமால் 80 ஓட்டங்களை அதிரடியாக விளாசினார்.

ஒன்ரே ரஸல் 13 பந்துகளில் 24 ஓட்டங்களை பெற்றார்.

ஒருபக்கத்தில் விக்கெட்கள் வீழ்த்தப்பட்டாலும் மத்திய வரிசையில் அதிரடியாக விளையாடிய இசுரு உதான 4 சிக்சர்களுடன் 12 பந்துகளில் 34 ஓட்டங்களை விளாசினார்.

கொழும்பு கிங்ஸ் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்களையே பெற முடிந்தது.

இதனையடுத்து, சுப்பர் ஓவரில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 01 விக்கெட் இழப்பிற்கு 16 ஓட்டங்களை பெற்றது.

17 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணியால் 5 பந்துகளில் 11 ஓட்டங்களையே பெற முடிந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக தினேஷ் சந்திமால் தெரிவு செய்யப்பட்டார்.

Be the first to comment

Leave a Reply