இங்கே வந்து அரசியல் செய்யாது சொல்வதை மட்டும் கேளுங்கள்- கூட்டமைப்பு உறுப்பினரை கடும் தொனியில் பேசிய ஜோன்ஸ்டன்!

இங்கே வந்து அரசியல் செய்ய வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸை அமைச்சர் ஜோன்ஸ்டன் கோபமாக பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுக் கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதனின் கருத்திற்கு பதிலளித்த போதே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு கூறியிருந்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

‘வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் மகாவலி அதிகார சபையினால் தமிழர் கிராமங்கள் சிங்கள கிராமங்களாக பெயர்மாற்றப்பட்டு அங்கே சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறன. மேலும் இவ்வாறு குடியேற்றப்பட்ட குடியேற்றங்களுக்குத் தான், மகாவலி அதிகார சபை முழுமூச்சோடு செயற்பட்டு வருகிறது.

இந்த விடயம் தொடர்பாக 13 எம்பிகள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றினை அமைச்சர் சமல் ராஜபக்சவிற்கு கொடுத்திருந்தோம்.

இந்த திட்டத்தால் எங்களுடைய மக்களுடைய இடங்கள் பறிக்கப்பட்டு ஏனைய மாவட்டங்களில் இருந்து இங்கே குடியேற்றங்கள் வரும் ஆபத்து இருக்கிறது ஆகவே இப்போதைக்கு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றும், தமிழர்கள் ஒருவருக்கும் இடம் இல்லை எனவும் அந்த கூட்டத்தில் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ,

இங்கே அரசியல் செய்யாமல் சொல்வதை கேளுங்கள் என கடின தொனியில் சார்ல்ஸ் நிர்மலநாதனைச் சாடியிருந்தார். மேலும் நீங்கள் கூறுவது முற்றிலும் தவறானது, மகாவலி அமைச்சினால் அனைத்து பகுதியினருக்கும் இடம் ஒதுக்கப்படிருக்கிறது.

பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டும் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் வந்து விவசாயம் செய்யலாம். உங்களிடம் யாராவது இருந்தாலும் கேளுங்கள், அதை விடுத்து யாரும் கொண்டுவந்து அமர்த்தியிருக்கிறார்கள் என்று அரசியல் செய்யாதீர்கள் என கடுமையாகச் சாடியிருந்தார்.

அதன் பின்னர் சார்ல்ஸ் நிரமலநாதன் அமைதியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply