PCR பரிசோதனை செய்ய வந்தவர்களின் மோசமான செயல்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மஹவ – கெத்தபஹூவ பிரதேசத்தில் பி.சி.ஆர் பரிசோதனை எடுக்க வேண்டும் என கூறி பொது சுகாதார பரிசோதகர்கள் என்ற போர்வையில் வந்தவர்கள் குறித்த பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

நேற்று மாலை 3.30 மணியளவில் கெத்தபஹூவ பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்ற மூன்று பேர் தம்மை பொது சுகாதார அதிகாரிகள் என அடையாளப்படுத்தியுள்ளனர்.

பின்னர் குடியிருப்பாளர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் அவர்களுக்கு குடிப்பதற்கு மருந்துகளையும் கொடுத்துள்ளனர்.

இவர்கள் கொடுத்த மருந்தை குடித்தவர்கள் இன்று காலையே எழுந்துள்ளனர்.

எழுந்து பார்த்த போது வீட்டிலிருந்த மூன்றரை பவுண் தங்கம் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து மஹவ பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள சிக்கலான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.

பி.சி.ஆர் சோதனைக்கு முன் எந்த மருந்துகளையும் எடுக்கக்கூடாது என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளும் கூறுகிறார்கள்.

இதன் காரணமாக பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம் என்று அஜித் ரோஹண தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply