பொம்பியோவுடன் இலங்கை அரசு பேசவுள்ள விடயங்கள் எவை?

அமெரிக்காவுடன் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள சகல ஒப்பந்தங்களும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று (27) இடம்பெற்றது.

இதன்போது மைக் பொம்பியோவின் வருகை மற்றும் ஏற்படுத்திக் கொள்ளப்படவுள்ள உடன்படிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரவை பேச்சாளரிடம் வினவினர்.

இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனை கூறினார்.

மேலும் நாட்டுக்கு உகந்த விடயங்கள் குறித்தே அமெரிக்க இராஜாங்க செயலாளருடன் பேசவுள்ளதாகவும் அவர் கூறினார்.

முக்கியமாக நாட்டின் சுயாதீன தன்மைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலேயே அனைத்து பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அனைத்து பேச்சுவார்த்தைகளும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நல மேம்பாடு சம்பந்தப்பட்டவையாகவே இருக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

மேலும் அடுத்த வருடமளவில் புதிய அரசியல் யாப்பை கொண்டு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்க 9 பேர் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேபோல் பசில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாவரா என்பது குறித்து ஜனாதிபதியிடமே கேட்டறிய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Be the first to comment

Leave a Reply