வேலைவாய்ப்பில் அரசியல் தலையீடு: ஜனாதிபதி வாக்குத்தவறிவிட்டார்! முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் மயூரன் விசனம்

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கி கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு வழங்கப்படவுள்ள ஒரு இலட்சம் பேருக்கான நியமனம் வழங்கும் செயற்பாட்டில் அரசியல் தலையீட்டை தவிர்க்குமாறு முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத்திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சிலரிற்கான நியமனக்கடிதங்கள் கடந்த சில நாட்களாக வழங்கப்பட்டு வருகின்றது. குறித்த நியமனங்கள் அரசாங்க மற்றும் அதன் பங்காளிகட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் அவர்களது அலுவலகங்களில் வைத்து வழங்கப்பட்டுவருகின்றது. இது அரச நியமனத்தில் உட்சபட்ச அரசியல்  தலையீட்டையே வெளிப்படுத்தி நிற்கின்றது. அத்துடன் அரசியல் வாதிகளால் தெரிவு செய்யப்பட்டவர்களிற்கு மாத்திரம் நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டால் உண்மையிலேயே வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்துவரும் நிலையில் இராணுவத்தினால் நடாத்தப்பட்ட நேர்முகத்தேர்வுகளில் கலந்துகொண்டவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்களா என்பதை அரசும், ஜனாதிபதியும் தெளிவுபடுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

ஒரு இலட்சம் அரசவேலைவாய்ப்பு நியமனத்தில் எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இருக்காது என்றும் அந்த நியமனங்களில் ஏழைக் குடும்பங்களிற்கே முன்னுரிமை அழிக்கப்படும் என்றும் ஜனாதிபதி அறிவித்திருந்த நிலையில் தற்போது அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களிற்கும் அவர்களிற்காக கட்சி பணியாற்றிவர்களிற்கும் குறித்த நியமனங்கள் வழங்கபடுகின்றமை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடாகவே காணப்படுகின்றது.

குறித்த செயற்பாட்டின் மூலம் அரசவேலையின் பெறுமதியான தன்மை அற்றுப்போயுள்ளதுடன், நேர்முகத்தேர்வுகளில் பங்குபற்றிய, தகுதியான பலரின் வாய்ப்புக்களும் தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது.

எனவே ஜனாதிபதி அறிவித்தது போல நேர்முகத்தேர்வுகளில் பங்குபற்றி வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருபவர்களிற்கு நீதியான முறையில் நியமனங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply