ஹட்டன் நகர் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு

ஹட்டன் நகர் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலாகும் வகையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

ஹட்டன் நகரில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தலவாக்கலை – லிந்துலை நகரசபை நிர்வாகத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நகரபிதா தேசபந்து அசோக சேபால தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையிலும் கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டமையை அடுத்து தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இன்று வரை 11 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி.விநோதன் தெரிவித்தார்.

மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு அனைத்து சலூன்களும் மூடப்பட வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் க. கருணாகரன் அறிவித்துள்ளார்.

புத்தளம் நகரில் இன்று தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

புத்தளம் பஸ் தரிப்பிடம், அரச மற்றும் தனியார் வங்கிகள், கடைகள், மீன் சந்தை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தொற்று நீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தளம் நகரசபை மற்றும் சுகாதார சேவை பணிமனை இணைந்து இந்த செயற்பாடுகளை மேற்கொண்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இதேவேளை, மேலும் 541 கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் இதுவரை 4,941 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் இதுவரை 8,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அவர்களில் 3,933 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 4,464 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

நாட்டில் இதுவரை 16 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply