நாட்டிலுள்ள 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்

நாட்டிலுள்ள 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலிலுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளிலும் கம்பஹா மாவட்டத்திலும் குளியாப்பிட்டியில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் களுத்துறை மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவுகளிலும் வெல்லம்பிட்டி, கொத்தட்டுவ, முல்லேரியா மற்றும் வெலிக்கடை பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையில் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கம்பஹா மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுளளது.

மாவட்டத்திலுள்ள மக்கள், தமக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களுக்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள முடியும்.

எவ்வாறாயினும் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய, வீடுகளிலிருந்து ஒருவர் மாத்திரம் வர்த்தக நிலையங்களுக்கு செல்வது உசிமானது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தூர பகுதிகளிலிருந்து வர்த்தக நிலையங்களுக்கு செல்வோர், ஒரே வாகனத்தில் ஒன்று கூடி செல்ல வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு ஒன்றுதிரண்டு, ஒரே வாகனத்தில் பலர் பயணிப்பார்களாயின் அது தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிக் கிளைகளும் இன்று திறக்கப்படவுள்ளன.

வாடிக்கையாளர்களின் வசதி கருதி இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிக் கிளைகளை திறக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

வங்கி ஊழியர்கள் தமது அலுவலக அடையாள அட்டைகளை பயன்படுத்தி சேவைக்கு சமூகமளிக்கு முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பாதுகாப்பு ஊழியர்கள், தாம் பணிபுரியும் அலுவலகத்திற்கு செல்வதற்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில், ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளை மட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பின், அது குறித்து குறித்த பகுதிக்கான பொதுசுகாதார பரிசோதகருக்கு அறிவித்து, நிகழ்வில் கலந்து கொள்ளும் மிகக்குறைந்தளவான எண்ணிக்கையுடன் திருமணத்தை நடத்துமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் திருமண நிகழ்வினை நடாத்துவது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, மரண சடங்கொன்று இடம்பெறுமாயின் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிக்கு செல்வதற்கு, பொலிஸாரின் அனுமதி பெறப்பட வேண்டும்.

உயிரிழந்தவரின் மிக நெருங்கிய உறவினருக்கே இதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது.

Be the first to comment

Leave a Reply