மிரட்டல்காரர்களையும் திருடர்களையும் பாதுகாக்கவே இந்த அதிகாரம்! கடும் சீற்றத்துடன் ஹரீன்

சிங்கள, பௌத்த அரசாங்கம் என கூறிக்கொண்டு ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு முஸ்லிம் வாக்குகள் தேவைப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அரசாங்கத்தில் உள்ள அனைவரும் அடிமைகளாக மாறியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

சிங்கள, பௌத்த அரசாங்கம் என கூறிக்கொண்டு ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு முஸ்லிம் வாக்குகள் தேவைப்பட்டுள்ளது. அதிகாரத்தின் மீதான வெறியை 20 மூலம் நான் காண்கின்றேன். அதாவது தனி ஒருவருக்கு அதிகாரத்தை வழங்குவதற்குள்ள ஆசை. ஆகவே அரசாங்கத்தில் உள்ள அனைவரும் அடிமைகளாக மாறியுள்ளனர்.

மிரட்டல்க்காரர்களையும், திருடர்களையும், அரசாங்கத்தில் உள்ள சில கத்தரிக்காய்களை பாதுகாக்கவுமே இவ்வாறான அதிகாரத்தை கேட்கின்றனர். நிறைவேற்றதிகார ஜனாதிபதியும், பிரதமர் வசம் நாடாளுமன்ற அதிகாரமும் உள்ள நிலையில் எதற்காக மேலும் பலத்தை கேட்கின்றனர்.

ஒரு காலத்தில் அரசாங்கம் தோற்றுப் போனால் சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும் அல்லவா? அதனை தடுப்பதற்கே இப்போதிருந்து பாதையை சரி செய்கின்றனர். ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் சிறந்த ஆட்சியை நடத்துவதில் ஜனாதிபதி தோற்று போயுள்ளார்.

ஆகவே இன்று முதல் நாடாளுமன்றம் ஒன்று அவசியப்படாது. பிரதமர் தொடர்பிலேயே நான் கவலையடைகின்றேன். ஏனேனில் அவரிடம் இருந்த அதிகாரங்கள் அனைத்தையும் இன்று கோட்டாபயவிடம் கையளித்துள்ளனர். இதன் காரணமாகவே நான் கவலையடைகின்றேன். பிரதமர் எமது பிரதிவாதி ஆனால் அவர் எமது துரோகியல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply