கிளிநொச்சியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் தொடர்பில் வெளியானது முடிவு!

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரின் மாதிரிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொழிலின் நிமித்தம் தங்கியுள்ள 30 பேருக்கே இவ்வாறு கடந்த திங்கட்கிழமை மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குறித்த மாதிரிகளின் பரிசோதனையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என நேற்று அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேலும் சில ஒப்பந்த நிறுவனங்களில் இவ்வாறு வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்துள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்பிலான தகவல்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளி மாவட்டங்களிலிருந்து வந்து கிளிநொச்சி மாவட்டத்தில் தங்கியுள்ள அனைவரும் தம்மை பற்றிய தகவல்களை சுகாதார சேவைகள் பணிமனைக்கு கிடைக்கக்கூடிய வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியில் குறித்த தொற்று மாவட்டத்தில் பரவாமலும், அதனை தடுக்கும் வகையிலும் பொறுப்புடன் மக்கள் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், வெளி இடங்களில் இருந்து ஏதோவொரு காரணங்களிற்காக வருகை தரும் மக்கள் மற்றும் தொழிலின் நிமித்தம் வெளி இடங்களிற்கு சென்று சொந்த இடங்களிற்கு திரும்பியோர் இவ்விடயம் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவ்வாறு இதுவரை தகவல்கள் வழங்காது இருப்போர் நேரடியாக சுகாதார சேவைகள் பணிமனையுடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும், அல்லது பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர், கிராம சேவையாளர் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்களிற்கு தகவலை வழங்கி பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வெளிப்படைத்தன்மையாக நடந்துகொள்ளும் சந்தர்ப்பத்தில் கொரோனா தொற்றிலிருந்து தம்மையும், ஏனைய மக்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்

Be the first to comment

Leave a Reply