வவுனியாவில் கோபத்தால் பறிபோன மூன்று உயிர்கள்: முக்கொலையின் பின்னனி என்ன?

கோபத்தில் எடுக்கும் முடிவுகள் விபரீதத்தையே தரும் என்பார்கள். அதுபோலவே நவராத்திரி தினத்தின் முதல் நாளான சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வவுனியாவில் இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளது.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான ஓமந்தை, மாணிக்கவளவு, மாணிக்கர் இலுப்பைக்குளம் என்ற கிராமம் அமைந்துள்ளது. தினமும் நாட்கூலி வேலை, காடுகளுக்குச் சென்று வருமானத்தேடல் என அந்த மக்களின் நாளாந்த சீவியம் போராட்டத்துடனேயே சென்று கொண்டிருக்கின்றது.

அத்தகையதொரு போராட்டத்திற்கு மத்தியில் மக்கள் வாழும் அந்த கிராமத்தில் ஏற்பட்ட இரட்டைக் கொலை சம்பவம் காயமடைந்த மற்றைய நபரின் ( திங்கள் கிழமை 7.10) இறப்புடன் முக்கொ லையாக பதிவாகியுள்ளது. சந்தேக நபரான அந்த கிராமத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்ட ஒரு அலசலே இது.

வவுனியா, ஓமந்தை, மாணிக்களவுப் பகுதியில் உள்ள மாணிக்கர் இலுப்பைக்குளம் என்ற பகுதியில் தம்பா என்றழைக்கப்படும் கோபால் குகதாசன் (வயது 42) தனது நான்கு பிள்ளைகளுடனான குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார்.

வழமையாக நாளாந்த வாழ்க்கைப் போ ராட்டம் ஒடிக் கொண்டிருந்த போது கடந்த வெள்ளிக்கிழமை மாங்குளம், ஒட்டிசுட்டான் வீதியின் 9 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள மேலியாவனம் என்ற கிராமத்தில் வசிக்கும் மச்சான் முறை உறவினரான சிவனு மகேந்திரன் (வயது 34) என்வரும், அவரது நண்பரான சு.சிவகரன் (வயது 41 ) என்பவரும் தம்பாவின் வீட்டிற்கு வருகை தந்தனர்.

வருகை தந்த அவர்கள் தம்பாவின் அயலவர்களிடம் உழவு இயந்திரம் ஒன்றை விரைவில் அனுராதபுரத்தில் கொள்வனவு செய்யவுள்ளதாகவும், இன்று தம்பாவைப் பார்த்து விட்டு போவோம் என வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

வந்தோரை வரவேற்கும் தமிழர் பண்பாட்டை பின்பற்றிய தம்பாவும் தனது மச்சானுக்கும், அவரது நண்பருக்கும் விருந்து கொடுக்க தீர்மானித்தார். கோழி சமைத்து சாப்பாடு வழங்கியதுடன், மது விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தார்.

மாணிக்கர் இலுப்பைக்குளம் பகுதியில் தம்பா கட்டிய புதிய வீடு எவரும் இன்றி இருந்தது. அந்த வீட்டில் மது விருந்துக்கும் ஏற்படாகியிருந்தது. வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகிய ம து வி ருந்து சனிக்கிழமை அதிகாலை 2 மணி தாண்டியும் நீடித்துள்ளது. குறித்த விருந்தில் நடந்த வீட்டில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள வீட்டில் 30 வயதுடைய கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வசித்து வருகின்றார்.

1995 ஆம் ஆண்டு நாட்டு யுத்தம் காரணமாக இந்தியாவுக்கு தாய், தந்தையுடன் சென்று அங்கு படித்து வந்த கண்ணன் 2015 ஆம் ஆண்டு ச ட்டவிரோதமாக கடல் மூலம் அவுஸ்ரேலியா சென்ற போது கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவில் 2 வருடம் தடுத்து வைக்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

அதன் பின் தாய், தந்தையரின் தொடர்பின்றி தாயாரின் காணியில் உள்ள மாணிக்கர் இலுப்பைக்குளம் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். கூலி வேலைக்கு செல்வதும், கூலி வேலை இல்லாத போது புதூர் காட்டுப்பகுதிக்கு சென்று தேன் எடுப்பதும் என இவரது நாளாந்த வாழ்க்கை பயணம் ஓடிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மது அருந்திவிட்டு கண்ணன் வீட்டில் உ றங்கியுள்ளார்.

இதன்போது, தம்பாவின் புதிய வீட்டில் இருந்து சண்டை போடுவது போன்று எழுந்த அதிக சத்தத்தையடுத்து அதிகாலை 2.00 – 2.30 மணியளவில் கண்ணன் அங்கு சென்றுள்ளார். அப்போது தம்பாவும், மச்சானும், மச்சானின் நண்பரும் மது அ ருந்திக் கொண்டு இருந்துள்ளனர்.

கண்ணனைக்க் கண்டதும் தம்பாவின் மச்சானின் நண்பர் கதைத்த போது முன்பின் அறியாத இருவருக்கும் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தம்பாவும் மற்றைய இருவரும் கண்ணனை அறைக்குள் இழுத்து சென்று அடித்துள்ளனர். அங்கிந்து 2.45 மணியளவில் தப்பிச் சென்ற கண்ணன் தனது வீட்டில் படுத்துள்ளார்.

வெறியில் இருந்த கண்ணனுக்கு அவர்கள் அடித்தது கோபத்திற்கு மேல்கோபத்தை ஏற்படுத்தியது. தூக்கம் வரவில்லை. கோபத்திற்கு பழி தீர்க்க முற்பட்டான். விபரீத முடிவெடுத்தான்.

நாளாந்தம் அவனது வாழ்க்கையுடன் பழக்கப்பட்ட கோடரியையும், பக்கத்து வீட்டில் சில தினங்களுக்கு முன் கைமாறாக வேண்டிய காட்டுக் கத்தியையும் எடுத்துக் கொண்டு அதிகாலை 4 மணியளவில் தம்பாவின் வீட்டிற்கு சென்றான். காட்டுக் கத்தி யை வேலியில் சார்த்திவிட்டு உள்ளே சென்ற போது அங்கு மூவரும் நிறை வெறியில் உறங்கிக் கொண்டிருந்தனர்.

எந்த சத்தமும் இல்லை. அமைதியாக இருந்தது. மெல்ல நடந்து சென்ற கண்ணன் தம்பாவுக்கும், தம்பாவின் மச்சானுக்கும் நடுவில் நின்று கொண்டு தம்பாவின் உச்சந் தலையில் கோடரியால் கொத்தினான். தம்பா எந்த அசைவும் இன்றி அந்த இடத்திலேயே மரணித்தார்.

மறுபுறம் திரும்பி தம்பாவின் மச்சானுக்கும் கோ டரியால் கொத்தினான். அவரும் எந்த அசைவும் இன்றி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. நின்ற இடத்தில் இருந்து தம்பாவின் மச்சானின் நண்பருக்கு கொத்திய போது நெற்றியில் பிளவு ஏற்பட்டது.

இதனையடுத்து பொலிசார் தன்னை கைது செய்து விடுவார்கள் எனக் கருத்திய கண்ணன் அங்கிருந்து வெளியேறி வேலியில் சாத்தி வைத்திருந்த காட்டுக் கத்தியையும் எடுத்து கொண்டு, சில நாட்களுக்கு முன் வாங்கிய அயல் வீட்டாரிடம் கத்தியை கொண்டு சென்று கொடுத்து விட்டு, நான் மூன்று பேரையும் போட்டுள்ளேன் எனத் தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.

கண்ணன் பகிடியாக கூறினான் என அவர்கள் நினைத்தார்கள். இருப்பினும் சந்தேகத்தில் அயலில் உள்ள பிறிதொரு நபரையும் அழைத்துக் கொண்டு சென்று பார்த்த போது மூவரும் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். உடனடியாக ஓடிச் சென்ற அவர்கள் ஓமந்தைப் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.

ஓமந்தைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுரேஸ்த சில்வா அவர்களின் வழிகாட்டலில், ஓமந்தை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும், ஓமந்தை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியுமான எஸ்.சுகந் தலைமையில் பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.

சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இருவரது உ யிர் பிரிந்திருந்தது. தம்பாவின் மச்சானின் நண்பர் துடித்துக் கொண்டு இருந்துள்ளார். உடனடியாக பொலிசார் 1990 அவசர அம்புலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு குறித்த நபரை அனுப்பி வைத்தனர்.

அதன்பின் சம்பவ இடத்தில் காணப்பட்ட இரு சடலங்கள் அங்குள்ள தடயப் பொருட்களை வைத்து ஓமந்தை குற்றத்த டுப்பு பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர். வவுனியா மாவட்ட நீதிபதி றியாழ் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதுடன் விசாரணைகளுக்கும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், அக் கிராமத்தில் இருந்து பேரூந்தில் செல்வதற்காக சென்று கொண்டிருந்த இளைஞன் ஒருவரை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் சந்தேகத்தில் கைது செய்து வி சாரணை செய்த போது குறித்த இளைஞனே (கண்ணன்) இவ் இரட்டை கொலையையும் புரிந்ததாகவும், இலங்கையில் தனக்கு உள்ள ஒரேயொரு உறவினரின் மாத்தளையில் உள்ள வீட்டிற்கு செல்வதாகவும் பொலிசாரிடம் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

அத்துடன் குறித்த நபரிடம் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக கருதப்படும் கோடரியும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அங்குள்ள சான்றுப் பொருட்களும், சாட்சியங்களும் கண்ணனுக்கு இக் கொலையில் தொடர்பிருந்ததை வெளிப்படுத்துகின்றன. இதனையடுத்து கண்ணன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் உள்ளார்.

அத்துடன், இரட்டை கொலை தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை முடிவும் வெளியாகியுள்ளது. தலையில் கூரிய கோடரி போன்ற ஆயு த த் தால் கொத்தியதால் தலை பிளவடைந்து மூளை இரண்டாக பிளந்தமையால் இவ் இ றப்பு இடம்பெற்றது என அந்த அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன் கா யமடை ந்து சிகிச்சை பெற்று வந்த தம்பாவின் மச்சானின் நண்பரான சு.சிவகரனும் வவுனியா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை ம ரணமடைந்து ள்ளார்.

இதேவேளை, இக் கொ லை ச் ச ம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்குமா அல்லது வேறு நபர்கள் அங்கு வந்து சென்றார்களா என்ற கோணத்திலும் ஓமந்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தீவிர விசாரணை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவையே உலுக்கிய இந்தச் சம்பவம் அதிக குடியாலும், கோபத்தாலும் வந்த வினை. குடி குடியைக் கெடுக்கும் என்பது போல் நான்கு பேரினதும் மது போதை இன்று மூவருக்கு எமனாக மாறியுள்ளதுடன், ஒருவரை ஆயுள் தண்டனை கைதியாகியுள்ளது. இனி அவர்களது குடும்பங்களின் நிலை…?

Be the first to comment

Leave a Reply