ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் அதிகரித்தால் ஆபத்தாக மாறும்! எச்சரிக்கும் ராஜித

20ம் திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்குவது ஆபத்தானதாக அமையும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

20ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தில் இன்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு நபரினதும் உண்மையான முகத்திரையை அறிந்துகொள்ள கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு வழங்கினால் அவர்களின் உண்மை முகம் வெளிப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நல்லாட்சியுடன் கூடிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த நாடுகளில் ஜனாதிபதி முறைமை கிடையாது எனவும் பிரதமர் முறையே காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியொரு நபருக்கு மித மிஞ்சிய அளவில் அதிகாரத்தை ஒருமுகப்படுத்தும் முயற்சியாகவே 20ம் திருத்தச் சட்டத்தை நோக்குவதாகவும் இது ஆபத்தானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அரசியல் அமைப்பு பேரவை இல்லாதொழிக்கப்பட்டு, நாடாளுமன்ற பேரவை உருவாக்கப்பட உள்ளதாகவும் இது மிகவும் ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

19ம் திருத்தச் சட்டம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி அதிகாரத்திற்காக உருவாக்கப்பட்டது கிடையாது எனவும் அது நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றம், நாடாளுமன்றம் மற்றும் நிறைவேற்று அதிகாரம் ஆகிய மூன்று தூண்களும் சமநிலையில் இருக்க வேண்டும் எனவும் இதில் ஒரு தூணின் உயரத்தை அதிகரிப்பது நாட்டின் சமனிலையை பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டும் அதிகரிப்பது சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு வழியமைக்காது எனவும் இதனால் 20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது நாட்டுக்கு பாதமானது எனவும் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

20ம் திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு அதீத அதிகாரங்களை வழங்குவது ஆபத்தானதாக அமையும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply