சாவகச்சேரியில் கிறிஸ்தவ பொது மயானத்திற்கு இடம்

கத்தோலிக்க மதம் சாராத கிறிஸ்தவ பொது மயானத்திற்கு இடம் ஒதுக்கிக் கொடுக்க சாவகச்சேரி நகரசபை முடிவெடுத்துள்ளது.

நகரசபை உறுப்பினர் ம.நடனதேவன் விடுத்த கோரிக்கையை அடுத்து கிறிஸ்தவ மயானத்திற்கு இடம் ஒதுக்கிக் கொடுக்க நகரசபை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக நகரசபை உறுப்பினர் ம.நடனதேவன் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் மேற்குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண் ஒருவர் நோய்வாய்ப்பட்டு மரணித்த போது அவரின் உடலை கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் புதைக்க சாவகச்சேரி நகரசபை முதலில் அனுமதி கொடுத்து பின்னர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.

இருப்பினும் பின்னர் எனது கோரிக்கையின் பயனாக இந்து மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டது. ஓர் சடலத்தை அடக்கம் செய்யும் வேளையில் இடம் ஒதுக்க முடியாது என மறுப்பது மனசாட்சிக்கு விரோதமான செயற்பாடு. ஓர் மனிதன் கருவில் உருவானதில் இருந்து இறக்கும் வரை அந்த மனிதனுக்கான சேவைகளை வழங்குவதில் நகரசபையின் பங்கு அளப்பரியது.

இந்து மயானத்திற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தினை கிறிஸ்தவ பொது மயானம் அமைக்கவும் வழங்க வேண்டும். சாவகச்சேரி நகரில் 300க்கு மேற்பட்ட கத்தோலிக்க மதம் சாராத கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

அவர்களில் பெரும்பாலானோர் எமது நகரசபையில் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களின் உடல்களை புதைப்பதற்கான இடத்தை இதுவரை ஒதுக்காமல் விட்டது நகரசபையின் தவறு என்றார்.

Be the first to comment

Leave a Reply