கட்டுநாயக்காவில் 213 பேருக்கு கொரோனா உறுதி ; அதிகாரிகளுக்கு விசேட உத்தரவு..!

கொழும்பு- கட்டுநாயக்க சுதந்திர வா்த்தக வலயத்தில் 213 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் அனைத்து ஊழியர்களும் இன்று திங்கட் கிழமை முதல் தங்களின் தனியார் வாகனங்களில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த ஊழியர்கள் பணியிடங்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தால் வழங்கப்படும் வாகனங்களில் மாத்திரம் வருகை தருமாறு கட்டுநாயக்க பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை ஊரடங்கு சட்ட அடையாள அட்டையாகப் பயன்படுத்தி மற்ற பகுதிகளுக்குச் சென்று விட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

ஊழியர்களுக்குப் போக்குவரத்து சேவையை வழங்குமாறு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக அதிகாரிகளே கொரோனா தொற்றால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவருகின்றது.

கட்டுநாயக்க வர்த்தக வலயத்தில் நெருங்கிய தொடர்பு கொண்ட கொரோனா தொற்றாளர்கள் 213 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 37 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 440ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply