துரோகி விஜய் சேதுபதி: ட்விட்டரில் டிரெண்டாகும் #TamilsTraitorVijaysethupathi

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவே கூடாது. அந்த படத்தில் இருந்து அவர் விலக வேண்டும் என்று இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், கவிஞர் தாமரை, வைரமுத்து உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800ல் இருந்து விஜய் சேதுபதி உடனடியாக விலக வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். முன்னதாக #ShameOnVijaySethupathi என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.

இந்நிலையில் #TamilsTraitorVijaysethupathi(தமிழர்களின் துரோகி விஜய் சேதுபதி) என்கிற ஹேஷ்டேக் இன்று ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ட்வீட் செய்பவர்கள் கூறியிருப்பதாவது,

இலங்கை கொடியை சட்டையில் குத்திய முதல் தமிழ் நடிகர் என்ற கேவலத்தை செய்துள்ளார் விஜய் சேதுபதி. நாம் இவ்வளவு சொல்லியும் கேட்காமல் இருக்கிறார் விஜய் சேதுபதி. அவரின் படங்களை புறக்கணிக்க வேண்டும்.

இலங்கையில் ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் கொடூரமாக கொலை செய்ததை பார்த்த பிறகும் முத்தையா முரளிதரனாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால் விஜய் சேதுபதியும் துரோகி தான்.

800 படம் எப்படி ரிலீஸாகிறது என்று பார்த்துவிடுவோம். இனி விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என்று அழைப்பதற்கு பதில் தமிழர்களின் துரோகி என்றே அழைக்க வேண்டும்.

விஜய் சேதுபதி மட்டும் 800 படத்தில் இருந்து விலகாவிட்டால் அவர் நடித்த மாஸ்டர் உள்ளிட்ட படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

நீங்கள் பார்ப்பதற்கு முரளிதரன் போன்று இல்லை மாறாக பிரபாகரன் போன்று இருக்கிறீர்கள். தலைவரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படும் போது அதில் நடிங்க விஜய் சேதுபதி என்று தாமரை தெரிவித்திருந்தார். 800 படத்தில் இளம் வயது முத்தையா முரளிதரனாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டதாக அசுரன் படம் புகழ் டீஜே தெரிவித்தார்.

படம் குறித்து டீஜே கூறியதாவது,

800 படத்தில் இலங்கை அரசு மற்றும் தமிழர்களுக்கு இடையேயான போர் காட்சி உள்ளது. அது எனக்கு சரி என்று தோன்றவில்லை. என் அம்மா ஈழத் தமிழச்சி. அந்த போரின்போது பல கொடூரங்கள் நடந்தது. இந்த படம் தொடர்பான பாலிட்டிக்ஸில் தலையிட நான் விரும்பவில்லை. அதனால் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன் என்றார்.

இந்நிலையில் தன் படத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிப்பதை பார்த்த முத்தையா முரளிதரன், இலங்கை தமிழனாக இருப்பது என் தவறா என்று கேட்டு அறிக்கை வெளியிட்டார்.

Be the first to comment

Leave a Reply