சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுக் கைதாகிக் கடந்த ஆறு மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா உடனடியாக விடுவிக்கப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் முன்னணி மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீதான குற்றச்சாட்டுக்கள் எதுவுமே நிரூப்பிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்க முடியாதெனவும் மன்னிப்புச் சபையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளதுடன் இலங்கை அரசாங்கத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் 90 நாட்கள் நீடிக்கும் தடுப்பு உத்தரவை நீதிமன்றத்தின் மூலம் பெற்று ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டாவது தடுப்புக் காவல் உத்தரவு நாளை சனிக்கிழமை 17ஆம் திகதி நிறைவடைகின்றது.

ஆகவே மீண்டும் தடுப்புக்காவல் உத்தரவு நீடிக்கப்படக் கூடாதென்றும் அவர் விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் மன்னிப்புச் சபையின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒருவரை 18 மாதங்கள் வரை குற்றப் புலனாய்வுப் பொலிஸாரால் தடுப்புக்காவலில் வைத்திருக்க முடியும்.

ஆனால் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை. இதனால் தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீடிக்க முடியாதென சர்வதேச மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் நீண்டகாலமாக நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் அரசாங்கத்தினால் தூஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சந்தர்ப்பங்களும் உண்டு.

ஆகவே அந்தச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டு, அந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டுமெனவும் மன்னிப்புச் சபையின் அறிக்கையில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply