கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீன மொழிக்கு முக்கியத்துவம் – சிங்களம், தமிழ் புறக்கணிப்பு!

வெளிநாடுகளில் இருந்து இலங்கையின் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு வருவோர் பற்றிய விபரங்களைப் பதிவு செய்யும் விண்ணப்பப்படிவம் சீன மொழியிலும் ஆங்கில மொழியிலும் மாத்திரமே காணப்படுகின்றது.

இலங்கைத் தீவின் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அந்த விண்ணப்பப்படிவத்தில் இல்லை.

இன்று வெள்ளிக்கிழமை சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வருகை தந்த சிங்களப் பிரமுகர் ஒருவர் இதனை கொழும்பில் உள்ள ஊடகவியலாளர்கள் சிலரிடம் கூறியுள்ளார்.

குறிப்பாக கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் உள் நுழைபவர்களிடம் தகவல்களைப் பெறும் விண்ணப்பப்படிவத்தில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு தேசிய மொழிகளும்  புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அந்தப் பிரமுகர் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள முறைப்பாட்டு அலுவலகத்தில் முறையிட்டுள்ளார்.

உடனடியாக இந்த விண்ணப்பப்படிவத்தை ரத்துச் செய்து புதிய விண்ணப்பப்படிவம் ஒன்றைத் தயாரித்து அவற்றில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு தேசிய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறும் அவர் தனது முறைப்பாட்டில் கோரியுள்ளார்.

சீன மொழியிலும் ஆங்கில மொழியிலும் உள்ள அந்த விண்ணப்பப்படிவத்தில் இலங்கைச் சுகாதார அமைச்சு, சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ றபர் முத்திரைகளும் காணப்படுகின்றன.

ஆகவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தச் சிங்களப் பிரமுகர் கேட்டுள்ளார். இது தொடர்பாக சுகாதார அமைச்சிடமும் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் கொள்பிடிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை போன்ற முக்கிய நகரங்களிலும் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிரதான கட்டுமானப் பணிகள் இடம்பெறும் பகுதிகள், உணவு விடுதிகள் போன்றவற்றிலும் சீன மொழியில் மாத்திரம் எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply