அரபு நாடாக இலங்கையை மாற்றும் சர்ச்சை – பின்னணி என்ன!

அனுராதபுரம் – கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹெட்டுவெவ கிராமத்தில் அமைந்துள்ள ஜெமாலியா அரபுக்கல்லூரி 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பதிவு செய்யப்பட்ட மத்ரசாவாக இயங்கி வருகின்றது.

இந்த மத்ரசாவின் 25 வருட நிறைவை முன்னிட்டு கடந்த 11 ஆம் திகதி வெள்ளி விழாவினை கொண்டாடுவதற்கு தீர்மானித்த மத்ரசா நிர்வாகம் இவ்விழாவின் போது மாணவர்களின் ஆக்கங்கள், ஆசிரியர் வாழ்த்துச்செய்திகள், அதிதிகளின் வாழ்த்துச்செய்திகள் போன்றவற்றை உள்ளடக்கி “வெள்ளிவிழா சிறப்பு மலர்” எனும் பெயரில் ஓர் சஞ்சிகையினையும் வெளியிட்டிருந்தது.

இந்த சஞ்சிகையில் மாணவர்கள் பலரிடமிருந்தும் அவர்களுடைய ஆக்கங்கள் பெறப்பட்டன.

அதில் “அரபு எழுத்தாணியில்” வரையும் கலையை பயன்படுத்தி மாணவர் ஒருவர் இலங்கை வரைபடத்தினையும் வரைந்து அதனை தனது ஆக்கமாக வழங்கியிருந்தார்.

சஞ்சிகையின் சகல விடயங்களும் மதரசா அதிபரின் அனுமதியோடு மிகிந்தல பிரதேசத்தில் உள்ள ஓர் அச்சகத்தில் அச்சிடும் பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்போது அங்கே பணிபுரியும் பெரும்பான்மை சமூகத்தைச்சார்ந்த ஒரு சிலரால் அரபு எழுத்தாணியில் இலங்கை வரைபட உருவில் வரையப்பட்ட ஆக்கம் அவதானிக்கப்பட்டதையடுத்து, இவர்கள் இலங்கை முழுவதையும் அரபு நாடாக மாற்றப்பார்க்கின்றார்கள் எனக்கருதி இது தொடர்பில் மிகிந்தல பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இதையடுத்து மிகிந்தல பொலிஸ் நிலையத்தினூடாக குறித்த மதரசா கல்லூரி அதிபர், செயலாளர் உட்பட மூவர் பொலிஸ் நிலையத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இச்சஞ்சிகையில் எதுவித தவறுகளும் இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன் அரபு எழுத்தாணியில் இலங்கை வரைபடம் வரையப்பட்டதற்கான காரணமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த “அரபு எழுத்தாணி” கலை தொடர்பில் முஸ்லிம்கள் பண்பாட்டு அலுவகள் திணைக்களத்தின் ஊடாக மிகிந்தல பொலிஸ் நிலையத்திற்கு கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக குறித்த வெள்ளிவிழா மதரசா நிருவாகத்தினால் பிற்போடப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் இனவாதம் கக்கும் ஒருசில விஷமிகளினால் இதுபோன்ற பிரச்சினைகள் வேண்டுமென்றே தோற்றுவிக்கப்படுவதோடு ஒரு சில வங்குரோத்து ஊடகங்களும் இனவாதத்தை மக்கள் மனதில் விதைக்கும் முகமாக தெளிவில்லாத செய்திகளை பிரசுரம் செய்வது குறித்து தாம் கவலையடைவதாக மதரசா அதிபர் சம்சுதீன் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply