திணறுகிறதா ஸ்ரீலங்கா அரசு! அமெரிக்க அரசாங்கம் கடும் எச்சரிக்கை

சீன அரசின் முதலீட்டாளர்கள் இலங்கையில் அதிகளவில் பிரசன்னமாகியுள்ளமை தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுதரகம் இலங்கை அரசாங்கத்துக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொமியோ இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

அமெரிக்க அரசினால் கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ள பல சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீட்டுச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக அமெரிக்கத் தூதுரகம் இலங்கை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. அத்துடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தைவிட சீனாவிடம் இருந்து அதிகளவு நிதியுதவிகளை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்கிறதென ஜனாதிபதி கேட்டபய ராஜபக்ச நிகேயி ஏசியா என்ற சஞ்சிகைக்கு வழங்கியுள்ள சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளார்.

சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்கின்றமை தொடர்பாக அமெரிக்கா எச்சரிக்கை விடுக்க முடியாதென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெகலிய ரம்புக்வெலவும் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

சீன நிறுவனங்கள் தொடர்பாக அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாதெனவும் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடும் அதிருப்தியடைந்துள்ள கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் மீண்டும் தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்துள்ளது.

எனினும் அமெரிக்கத் தூதரகம் அவ்வாறு அழுத்தம் கொடுக்கவில்லையென வெளிவிவகார அமைச்சு கூறுகின்றது.

இதேவேளை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளிலும் மருத்துவ உதவிகளை வழங்க சீன மருத்துவ நிறுவனம் ஒன்று இலங்கை அரசாங்கத்திடம் உறுதியளித்துள்ளதாக உயர் அதிகாரியொருவர் கூறுகின்றார்.

அதேவேளை இலங்கையில் அமெரிக்க, சீன, இந்திய நிறுவனங்கள் ஏட்டுக்குப் போட்டியாகச் செயற்பட்டு இலங்கையின் இறைமைக்கு ஆபத்து விளைவிப்பதாக ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று முன் தினம் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

அத்துடன் சீன நிறுவனங்களின் முதலீடுகள் தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply