துடிக்க துடிக்க 24 மணி நேரமாக ஐஸ் பெட்டியில் அடைத்து வைக்கப்பட்ட முதியவர்

சேலம் கந்தம்பட்டியில் உள்ள வீட்டில் 74 வயது முதியவரை சடலத்தை வைக்க பயன்படுத்தப்படும் குளிரூட்டி பெட்டியில் அவரது குடும்பம் 24 மணி நேரத்துக்கும் மேலாக அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய வளாகத்தில் உள்ள வீட்டில் 74 வயது முதியவர் பாலசுப்ரமணியம், அவரது சகோதரர் சரவணன், அவரது மனைவி, மகள்கள் கீதா, ஜெயஸ்ரீ ஆகியோர் வசித்து வருகின்றனர்

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் இருக்கும் பாலசுப்ரமணியம் இறந்து விட்டதாகக் கூறி சடலம் வைக்க பயன்படுத்தப்படும் தனியார் குளிர் பெட்டியை வாடகைக்கு வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்ட சரவணன், ஒரு குளிர் பெட்டியை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

அதன்படி ஒரு பெட்டியை அவரது வீட்டுக்கு கொண்டு வந்து வைத்த ஊழியர்கள், மறுதினம் அதை பெற்றுக் கொள்வதாகக் கூறிச் சென்றனர்.

இந்த நிலையில், மறுதினம் வீட்டுக்கு வந்த ஊழியர்கள், பெட்டிக்குள் முதியவர் பாலசுப்ரமணியம் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன.

இது குறித்து சரவணனின் குடும்பத்தாரிடம் கேட்டபோது, “அண்ணன் ஏற்கெனவே இறந்து விட்டார். அவரது ஆன்மா துடித்துக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் இறந்து விடுவார்” என்று எந்த பதற்றமுமின்றி தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், தங்களுடைய செல்பேசியிலேயே பாலசுப்ரமணியம் மூச்சு விடும் காட்சியை பதிவு செய்தனர். “பெரியவர் நன்றாகவே மூச்சு விடுகிறார். அவரைப் போய் ஐஸ் பெட்டியில் அடைத்திருக்கிறீர்களே” என்றும் அந்த குடும்பத்திடம் கூறிய ஊழியர்கள், அவர்களாகவே காவல்துறையிடமும் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சூரமங்கலம் காவல்துறையினர் சரவணன் வீட்டுக்கு வந்து பாலசுப்ரமணியத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், “பெரியவருக்கு உயிர் உள்ளது. ஐஸ் பெட்டியில் அவர் 24 மணி நேரம் உயிருடன் இருந்ததே ஆச்சரியமான விஷயம்” என்று கூறினர்.

Be the first to comment

Leave a Reply