தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்கள்,முகக்கவசம் அணியாதவர்களுக்கு கடூழிய தண்டனை.!!

தனிமைப்படுத்தல் தொடர்பில் புதிய சட்டங்கள் உள்ளடக்கப்பட்ட விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையெழுத்திட்டுள்ளார்.இதற்கமைய, குறித்த விசேட வர்த்தமானியில், அமைச்சர் இன்றையதினம் கையெழுத்திட்டதாக சுகாதார அமைச்சின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.இதன்படி, பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணல் மற்றும் முகக் கவசங்களை அணிதல் உள்ளிட்ட பிரதான சுகாதாரப் பாதுகாப்பு முறைகள், குறித்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, புதிய வர்த்தமானியின் படி, சட்டங்களை மீறும் நபர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாது அபராதம் விதிக்கவும், ஆறு மாத கால சிறைத் தண்டனை விதிக்கவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வர்த்தக நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களுக்கு செல்லும் போது, கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், வர்த்தக நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களில் பின்பற்றப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.குறித்த விசேட வர்த்தமானி இன்றிரவு வெளியிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன்படி,
01. வர்த்தக நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களுக்கு செல்லும் நபர்கள் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முகக் கவசம் அணிய வேண்டும்.
02 நபர்களுக்கு இடையில் ஒரு மீற்றருக்கு குறைவின்றி சமூக இடைவெளி கடைபிடிக்கப்படல் வேண்டும்.
03. நிலையங்களுக்கு உள்நுழையும் நபர்களின், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படல் வேண்டும்.
04. உள்நுழையும் நபர்களின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது தொடர்பு கொள்ள முடியுமான வகையில் தகவல்களை பதிந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
05. மேலும் வர்த்தக நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களில் நிறுவனத்தின் பரப்பளவுக்கு ஏற்ற வகையில், நபர்களை அனுமதித்தல் போன்ற செயற்பாடுகளையும் கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply