நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? சவேந்திர சில்வா விளக்கம்

நாட்டின் பாதுகாப்பு படையினர் கொவிட் 19 வைரஸ் ஒழிப்புக்கான பணியில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் தேசியப் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாதென கொவிட் ஒழிப்பு தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

“நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் போதாதுள்ளது. தற்போதைய சூழலில் 98 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக 2,000 பேர்வரை தனிமைப்படுத்தப்படக்கூடிய தனிமைப்படுத்தும் முகாமொன்றை இராணுவத்தினர் அமைத்துள்ளனர். இதுவரை 51,000 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை நிறைவுசெய்துள்ளனர்.

மினுவாங்கொடை தொழிற்சாலையில் முதலாவதாக கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட பெண்ணுக்கு முன்னரே பலர் இங்கு காய்ச்சல் மற்றும் சளிபோன்ற நோய் அறிகுறிகளுடன் இருந்துள்ளனர்.

மூலக்காரணிகளை ஆராய்ந்துவரும் சந்தர்ப்பத்தில் 33 பேர் வரை இந்தப் பெண்ணுக்கு முன்னரே நோய் தொற்றுக்கு உள்ளாகியிருக்கக் கூடும்.

கடந்த மாதம் 10ஆம் திகதிக்கும் 20ஆம் திகதிக்கும் இடையில்தான் இவர்கள் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்க கூடும். அதன் பிரகாரம் முதலில் நோய் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடிய 10 பேரை அடையாளப்படுத்தியுள்ளோம். அவர்களின் சந்திப்பு மார்கங்கள் குறித்து ஆராயந்து வருகிறோம்.

புலனாய்வுத்துறை உட்பட அனைத்து படையினரும் நாட்டின் சுகாதார பாதுகாப்புக்காக செயல்பட்டு வந்தாலும், தேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாது” என்றும் அவர் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply