20ஆவது திருத்தம் தொடர்பில் ஏனைய பீடங்களும் தங்களின் கருத்தை வெளிப்படுத்த வேண்டும்: ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் நாடு அரசாட்சி முறைக்கு செல்லும் என்றும், தற்போது 20 ஆவது சட்டமூலத்திற்கு எதிராக அமரபுர, ராமான்ய பீடத்து தேரர்கள் தங்களது கருத்தை தெரிவித்தது போன்று ஏனைய பீடங்களும் அவர்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா அரசாங்கம் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கே முயற்சித்து வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு நாடே அச்சத்தில் இருக்கும் போது, அரசாங்கம் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சித்து வருகின்றது.

ஏனைய உலக நாடுகள் வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்ற நிலையில், இந்நாட்டு அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலே கவனம் செலுத்தி வருகின்றது.

வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகளின் இலங்கைக்கு இரண்டாம் இடம்வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சில தினங்களில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

20 ஆவது திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என்றும் , அதனால் நாட்டுக்கு முழு அரசியலமைப்பு வரைபொன்றே தேவை என்றும் இலங்கை அமரபுர, ராமான்ய பீடத்து தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இவர்கள் கூறியுள்ள விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு தெரிவிக்கின்றோம். இதேவேளை, 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பாக ஏனைய பீடங்களும் தங்களது நிலைப்பாட்டை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply