இந்தியர்கள் எவரையும் அழைத்து வரவே இல்லை -பிரண்டிக்ஸ் நிறுவனம் மீளவும் மறுப்பு

இந்தியாவிலிருந்து இந்தியர்கள் எவரையும் அழைத்துவரவில்லை என மினுவாங்கொடையில் உள்ள ஆடைத்தொழிற்சாலை நிறுவனமான பிரன்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

தற்போது கொரோனா தொற்று இலங்கையில் தீவிரமடைந்த நிலையில் குறித்த நிறுவனம் இந்தியாவிலிருந்து தனது தொழிற்சாலைக்கு இந்தியர்களை எவ்வித சுய தனிமைப்படுத்தலும் இல்லாமல் அழைத்து வந்ததாக குற்றம் சமத்தப்பட்ட நிலையிலேயே அந்த நிறுவனம் மீளவும் அறிக்கையை வெளியிட்டு இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஜூன் 25 ம் திகதியும் ஓகஸ்ட் 8 மற்றும் செப்ரெம்பர் 22 ம் திகதிகளிலும் இந்தியாவின் விசாகப்பட்டினத்திலிருந்து தங்களது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்கள் 350 பேரை இலங்கைக்கு அழைத்துவந்ததாக பிரன்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

அனைத்து பயணிகளும் கொரோனாவைரசினை கட்டுப்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றினார்கள் என பிரன்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர்கள் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். 14 நாள் அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்ட இடத்திலும் பின்னர் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலிலும் ஈடுபட்டனர் எனவும் பிரன்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலை பூர்த்திசெய்த பின்னர் கொரோனா வைரஸ் தடுப்பிற்கான தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் கைச்சாத்திட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது எனவும் பிரென்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர் முதல் இரு விமானங்களிலும் அழைத்துவரப்பட்டவர்கள் உரிய பொதுசுகாதார பரிசோதகர்களின் கீழ் சுயதனிமைப்படுத்தலை மேற்கொண்டனர் எனவும் பிரன்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

அவர்கள் சுயதனிமைப்படுத்தலை மேற்கொண்டனர் என்பதற்கான சான்றிதழ் விமான பயணிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என பிரன்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை செப்டம்பர் 22 ம் திகதி இலங்கை வந்த 48 பயணிகளும் குறிப்பிட்ட பொது சுகாதார பரிசோதகர்களின் கீழ் தற்போது 14 நாள் சுயதனிமைப்படுத்தலை முன்னெடுக்கின்றனர் எனவும் பிரன்டிக்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து இந்தியர்கள் எவரையும் அழைத்துவரவில்லை என தெரிவித்துள்ள பிரன்டிக்ஸ் நிருவாகம் கடந்த இரண்டுமாத காலப்பகுதியில் மினுவாங்கொட ஆடை தொழிற்சாலைக்கு அவ்வாறான நபர்கள் எவரும் செல்லவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஏற்றுமதிக்கான எந்த வேண்டுகோளையும் பெறவில்லை இந்தியாவிலிருந்து எந்த மூலப்பொருளையும் கொள்வனவு செய்யவில்லை எனவும் பிரன்டிக்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply