வரணிப் பகுதியில் வீடு புகுந்து குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கும் கொடிகாமம் பொலிசார்!!

தென்மராட்சி வரணிப் பகுதியில் வீடு புகுந்து குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கொடிகாமம் பொலிஸார் தயக்கம் காட்டி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த மாதம் 19 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் நபர் ஒருவர் பொல்லு கோடரியோடு வீடு புகுந்து வீட்டிலிருந்த பெண் ஒருவருக்கும் வயோதிபர் இருவருக்கும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதுடன் வீட்டுப் பொருட்களையும் கோடாரியால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார்.

குறித்த தாக்குதலுக்கு உள்ளானவர்கள் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. பின்னர் வைத்தியசாலை சென்ற பொலிஸார் தாக்குதலுக்கு இலக்கான மூவரிடமும் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு 10 நாட்கள் கடந்த பின்பும் தாக்குதல் நடத்திய சந்தேகநபரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்யாத நிலையில் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்ட பின்னர் இம்மாதம் 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டு அடுத்தநாள் பிணையில் விடுவிக்கப்பட்டார். விடுவதற்கு முன்னர் இரு தரப்பிடமும் வாக்குமூலம் எடுக்கப்பட்டு 12 ஆம் திகதி நீதிமன்றுக்கு வழக்கு தாக்கல் செய்கிறோம் நீதி மன்றம் வாருங்கள் என பொலிஸ் தரப்பால் தெரிவிக்கப்பட்டது.

12ஆம் திகதி பொலிஸாரோடு பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பு கொண்டு நீதிமன்றம் செல்கிறோம் என சொன்ன போது இன்று போக வேண்டாம் 19 ஆம் திகதி கட்டாயம் செல்லுங்கள் என பொலிஸ் தரப்பால் அறிவிக்கப்பட்டது.

இன்று(19) பாதிக்கப்பட்ட மூவரும் நீதிமன்றம் சென்று சுமார் 5 மணித்தியாலம் காத்திருந்தும் குறித்த சம்பவம் தொடர்பான வழக்குப் பத்திரம் நீதிமன்றுக்கு அனுப்பப்படவில்லை எனவும் தெரிய வந்தது. இதன் பின் இது குறித்து பொலிஸ் நிலையம் சென்று வினவிய போது கடமையில் இருந்தவர்கள் வெளியே சென்று விட்டனர் எனவும் காத்திருக்குமாறும் அங்கு நின்றிருந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர் எனவும் தெரிய வருகிறது.

இவ்வாறு கொடிகாமம் பொலிஸார் நீதிக்கு எதிராக குற்றவாளிகளுக்கு அதரவு வழங்கி வருகிறார்களா என பாதிக்கப்பட்ட தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் அநீதி இழைக்கப்பட்ட எமக்கு நீதியை பெற்றுத்தருமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply