மன்னாரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற விசேட நடவடிக்கை!

மன்னார் தீவக பகுதியில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் பெரியகடை மற்றும் பட்டித்தோட்டம் பகுதியில் அதிகளவில் நடமாடி வந்த நிலையில் குறித்த நபருடன்பழகிய நபர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்கள் எனப் பலரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் ஜே.சி.பி ஓட்டுனர் மன்னார் ஆயர் இல்ல பின் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு பீ.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளது.

அதேவேளை நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ. சீ.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் என்னும் பலரை தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் மன்னார் மாவட்ட மக்கள் சுகாதார நடை முறைகளை கட்டாயம் பின் பற்றுவதுடன் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்ப்பதுடன் ஏனைய தொடர்புகளை முடிந்த அளவிற்கு தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இன்றைய தினம் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள இரண்டாம் தர சுய தனிமைபடுத்தலில் உள்ள குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு விசேட பாதுகாப்பு முறைகளுக்கு அமைவாக பரீட்சைகள் எழுதுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மன்னாரில் கடந்த வெள்ளிக்கிழமை இனம் காணப்பட்ட கொனோரா தொற்று நோயாளி ஒருவரைத் தொடர்ந்து மேலும் ஐந்து நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டி. வினோதன் தெரிவித்தார்.

வெளி மாவட்டத்திலிருந்து கட்டிட வேலைக்காக மன்னார் பட்டித்தோட்டப் பகுதிக்கு வந்திருந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை கடந்த வியாழக்கிழமை கண்டு பிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பட்டித்தோட்டம் பகுதியில் அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதன் போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தவருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்ததாக இனம் காணப்பட்ட 42 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த 42 பேரில் 8 நபர்கள் மன்னார் ஆயர் இல்ல வளாகத்துக்குள் தொழிலாளிகளாக கடமை புரிந்தவர்கள் எனவும் 28 நபர்கள் கட்டிடம் அமைக்கப்படும் பகுதியான தோட்டத்துக்குள் வேலை செய்தவர்கள் எனவும் 3 பேர் குறித்த தோட்டத்தைச் சுற்றி வீட்டில் வேலை செய்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஒருவர் ஆயர் இல்லத்தில் இருக்கும் அருட்பணியாளர், ஒருவர் சாரதி, ஒருவர் தொழிற்நுட்ப அதிகாரி என தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த 42 நபர்களின் பி.சி.ஆர்.பரிசோதனையில் 24 நபர்களின் அறிக்கைகளில் தோட்டத்துக்குள் கட்டிட வேலையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஐந்து பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டி.வினோதன் தெரிவித்தார்.

ஐந்து நபர்களும் வென்னப்புவ பகுதிகளைச் சோந்தவர்கள் எனவும் தெரிவித்தார். மேலதிக நபர்களின் பீ.சி.ஆர்.பரிசோதனை அறிக்கை எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply