கொரோனா நோயாளர்கள் தப்பிச் சென்ற செய்தியில் உண்மையில்லை- பிரதி பொலிஸ் மா அதிபர் அறிவிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட 119 நோயாளர்கள் தப்பிச் சென்றுள்ளதாக வெளிவந்த செய்தியில் உண்மையில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கம்பஹா- மினுவாங்கொட பிரான்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என உறுதிசெய்யப்பட்ட 119 பேர் தலைமறைவு எனவும் அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த மாவட்டச் செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அஜித் ரோஹன, “ஆடைத் தொழிற்சாலை கொரோனா வைரஸ் கொத்தணியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 119 பேர் தலைமறைவாகியுள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் பரவல் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது, வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த நபர்களுடன் தொடர்பினைப் பேணியதாகக் கருதப்படும் நபர்கள் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு தற்போது அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் எவரேனும் இன்னமும் சமூகத்தில் இருப்பார்களாயின் அவர்களை உடனே தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்” என்று தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply