பொலிஸ் உயரதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி 8,00,000 மோசடி: காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சியாட் கைது!

பொலிஸ் உயரதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்தி 8 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டில் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது காத்தான்குடி பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.சியாட் என்பவரே சந்தேகத்தின் பேரில் நேற்று (10) வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் வீடுகள் உடைத்து தங்க நகைகளை திருடிய சந்தேக நபரிடமிருந்து நகைகளை கொள்வனவு செய்த நகை வியாபாரி ஒருவரை, பாதுகாப்பதற்காக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறியே குறித்த நகை வியாபாரிடம் மேற்படி நகர சபை முன்னாள் உறுப்பினர் 8 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியுள்ளார்.இதனையடுத்து குறித்த நகை வியாபாரி 8 இலட்சம் ரூபா பணத்தை கொடுத்துள்ளார்.
இந்த விவகாரம் காத்தான்குடி பொலிஸாருக்கு தெரியவரவே விசாரணைகளை ஆரம்பித்த காத்தான்குடி பொலிஸ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தலைமையிலான பொலிஸ் குழு, நகரை சபை முன்னாள் உறுப்பினரைக் கைது செய்ததுடன் 8 இலட்சம் ரூபா பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி முன்னாள் நகர சபை உறுப்பினர் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் என பொய் கூறியுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து மேற் கொண்டு வருவதாகவும் குறித்த நபரையும் பணத்தையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply