மறு அறிவித்தல் வரை முற்றாக முடக்கப்பட்டது அனலைதீவு; காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள்!

அனலைதீவு பகுதி மறு அறிவித்தல் வரை சுகாதார பிரிவினரால் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இன்று காலை இருவர் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் அனலைதீவு பிரதேசத்தில் நடமாடியதாக கருதப்படுவதன் காரணமாக அனலைதீவு பிரதேசம் சுகாதாரப் பிரிவினர் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் காரைநகர் பிரதேசத்தில் நடமாடியதன் காரணமாக காரைநகர் பிரதேசத்தில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்பொழுது கொரோனா தொற்று ஒருவருக்கு மாத்திரமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

யாழ் மாவட்ட சுகாதார மேம்பாட்டுக் குழுவினுடைய தீர்மானத்தின்படி சகல பிரதேச செயலகங்களின் ஊடாக கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் ஊடாகவும் அதேநேரத்தில் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரது அறிவுறுத்தலின்படி சில முற் பாதுகாப்பு தொடர்பான ஏற்பாடுகளை வழங்கி அவர்களை நடைமுறைப்படுத்தும் படி வேண்டியிருக்கின்றோம்.

இந்த நிலையிலே தற்போது யாழ் மாவட்டம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் இன்னும் அபாயமான ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. ஆகவே முற்பாதுகாப்பு நடவடிக்கையினை அனைவரும் ஒருங்கிணைந்து எடுப்பது மிக கட்டாயமானதாகும். இன்றைய நிலையில் சுமார் 411 குடும்பங்களைச் சேர்ந்த 868 நபர்கள் சுயதனிமைப் படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

புங்குடுதீவில் சுமார் 127 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். புங்குடுதீவில் ஒரு பகுதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை யாழ் மாவட்டத்தில் எந்த பகுதியிலும் ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்படவில்லை. அநேகமாக தற்பொழுது வதந்திகள் பரப்பப்படுகிறது பொதுமக்கள் வதந்திகளை நம்பாதீர்கள்.

Be the first to comment

Leave a Reply