கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தாக்குதல் நடத்த முற்பட்ட ஆவா குழுவினர் மடக்கி பிடிப்பு -பயங்கர வாள்களும் மீட்பு

கிளிநொச்சியில் மூன்று வெவ்வேறு தாக்குதல் முயற்சியில் ஈடுபட முயற்சித்த ஆவா குழுவினர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து பயங்கரமான வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த நபர்களிடமிருந்து நான்கு வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி, வள்ளிபுனம் ஆகிய பகுதிகளில் குடும்பத்தவர்கள் சிலரை தாக்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகை தந்திருந்த நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய தினம் இவர்கள் கைது செய்யப்படாதிருந்தால் திட்டமிட்டபடி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் எனவும், குறித்த தாக்குதல் முயற்சி கிளிநொச்சி அரச புலனாய்வு பிரிவினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதானவர்கள் கிளிநொச்சி வட்டக்கச்சி, பரந்தன், செல்வாநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 14 நாள் தடுப்பு காவலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply