புலம்பெயர் மனிதஉரிமை ஆர்வலர் மீது பிரித்தானியாவில் கொலை முயற்சி!! பின்னணியில் சிறிலங்கா??

பிரித்தானியாவின் பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாளருமான கீத் குலசேகரம் மீது நேற்று ஒரு திட்டமிட்ட கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது. அதில் அவர் அதிஸ்டவசமாக உயிர்தப்பித்துள்ள போதும் அவரது கார் படுசேதம் அடைந்துள்ளது.

இது அவர்மேல் அண்மையில் நடாத்தப்பட்டுள்ள மூன்றாவது கொலை முயற்சி சம்பவம் என்று கூறப்படுகின்றது.

லண்டனில் சட்ட ஆலோசகராகவும் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளமாக பணியாற்றிவருகிற கீத் குலசேகரம், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் (ICPPG) பணிப்பாளர்களில் ஒருவராக கடமையாற்றி வருகின்றார்.

இவர், லண்டனில் தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு கழுத்தறுப்பு சமிக்கை மூலம் கொலைமிரட்டல் விடுத்த சிறிலங்கா பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கை முன்னெடுத்து, வழிநடத்தி வெற்றிபெறச்செய்ததைத் தொடர்ந்து இவர் மீதான கொலை முயற்சிகள், மிரட்டல்கள் அதிகரித்துள்ளாத தெரியவருகின்றது.

இராஜதந்திர பாதுக்காப்பு உள்ள அதியுயர் மட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரை முதல் முதலாக குற்றவாளியாக நிரூபித்த வழக்கு என்ற காரணத்தால், இது சர்வதேச மட்டத்தில் பிரபல்யம் அடைந்தது மட்டுமன்றி, தமிழர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் முதல் சட்ட வெற்றியாகவும் அந்த வழக்கு கருதப்படுகிறது.

இதனால் பிரியங்க பெர்னாண்டோ பதவியிழந்து லண்டனைவிட்டு இலங்கை திரும்ப நேரிட்டது மட்டுமன்றி, சிறிலங்கா அரசாங்கத்திற்கு இராஜதந்திர அரங்கில் பாரிய தலைகுனிவையும் ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, சிறிலங்கா அரசு சார்ந்த தரப்பே கீத் குலசேகரம் மீது இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, பிரித்தானியாவில் செயற்பட்டுவருகின்ற தமிழ் சட்டத்தரனிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள்.

கடந்த யூன் மாதம் நள்ளிரவில் இவரது பிரத்தியேக அலுவலகத்தினுள் புகுந்த ஒரு நபர் இவரை தாக்கவும் ஆவணங்களை திருடவும் முயற்சி செய்துள்ளார். தற்போது, இவரது கார் மீது இலக்குவைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடைபெற்ற விதம், நேரம் என்பன இது வெறும் களவு முயற்சி அல்ல என்பதையும், நீண்டநாளாக இவரை பின்தொடர்த்து, கண்காணித்து திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் என்று தமிழ் சட்டத்தரனிகள் குறிப்பிட்டார்கள்.

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் சிறிலங்கா தூதரகமும், சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகளும் இருப்பதாகத் தாம் சந்தேகிப்பதாக, லண்டனில் செயற்படும் மனித உரிமை செயற்பாடாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்த விடயம் தொடர்பாக கீத் குலசேகரத்திடம் தொடர்புகொண்டுகேட்ட பொழுது, பிரித்தானிய பொலிசார் இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகத் தெரிவித்தார்.

தன்னை அச்சுறுத்தும், அல்லது அகற்றிவிடும் நோக்கம் இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் இருப்பதாக தான் உணர்வதாக அவர் தெரிவித்தார்.

கீத் மீதான இந்தத் தாக்குல் பிரித்தானியத் தமிழர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply