யுத்த காலத்தில் தேவைப்பட்ட நாம் இப்போது விலக்கப்படுவது ஏன்?

வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் இன்றும், நாளையும் மாகாணம் தழுவிய ரீதியில் சுகயீன விடுப்பு போராட்டத்தில் குதித்துள்ளனர்.

சுகாதார சேவைக்குள் கடைமையாற்றிவரும் சாரதிகளை சுகாதாரதுறைகள் தவிர்ந்த வேறு திணைக்களங்களிற்கு இடமாற்றம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த சுகயீன விடுப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக சுகாதார சேவைகள் சாரதிகள் எட்டு மாகாணத்திலும் இல்லாத நடைமுறை வடமாகாணத்தில் மட்டும் ஏன்?, வடமாகாண சுகாதார சேவைகளின் சாரதியை இடமாற்றுவதை உடன் நிறுத்து, யுத்த காலத்தில் தேவைப்பட்ட நாம் இப்போது விலக்கப்படுவது ஏன்?, இலங்கைக்கு ஜனாதிபதி ஒருவர் வடமாகாணத்திற்கு ஏன் இப்படி? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நாடளாவிய ரீதியில் எப்பகுதியிலும் இல்லாத நடைமுறை வடக்கு மாகாணத்தில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடந்த 35 வருடங்களாக சுகாதார சேவைகள் தவிர்ந்த வேறு திணைக்களங்களுக்கான இடமாற்றங்கள் எமக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.

தற்போது 35 வருடங்கள் கழித்து இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் 8 மாகாணங்களில் இல்லாத நடைமுறை வடக்கு மாகாணத்தில் மாத்திரம் கொண்டு வரப்பட்டுள்ளமையை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக அனைத்து தரப்பிலும் எமது கோரிக்கையை முன்வைத்த நிலையில் எமக்கான சரியான தீர்வினை எவரும் வழங்கவில்லை.

எனவே எமது கோரிக்கையை முன்னிறுத்தி வடமாகாணம் தழுவிய ரீதியில் இன்றைய தினம் காலை முதல் சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன், தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்-19 பரவல் காரணமாக மக்களினதும், நோயாளிகளினதும் நலன்கருதி அம்புலன்ஸ் வாகன சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளில் ஈடுபடும் சாரதிகள் சுகயீன விடுப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply