அனைத்து தொழிற்சாலைகளிலும் பி.சி.ஆர். பரிசோதனை, ஊழியர்களை கண்டுபிடிக்கவும் வீட்டுக்கு வீடு இராணுவம்

அதிகளவான தொழிலாளர்களைக் கொண்ட அனைத்துத் தொழிற்சாலைகளிலும் எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைகள்  மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.    பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனாத் தொற்று சம்பவத்தைத் தொடர்ந்து, அதிகளவான தொழிலாளர்களைக் கொண்ட அனைத்து தொழிற்சாலைகளிலும் எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, தொற்று நோய்த் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.    “பிரெண்டிக்ஸ் சம்பவத்திற்குப் பின்னர், முன்னெச்சரிக்கையாக எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனையை தொடர்ச்சியாக நடத்த, அதிகளவான தொழிலாளர்களைக் கொண்ட அனைத்து தொழிற்சாலைகளுக்கும் நாங்கள் தகவல் கொடுத்துள்ளோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.    எவராவது வைரஸுடன் அடையாளம் காணப்பட்டால், அனைத்து ஊழியர்களிடமும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்பதே விதிமுறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   இதற்கிடையில், (07)  தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மினுவாங்கொடை தொழிற்சாலையின் சில ஊழியர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்ட மற்றும்  ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று தம்மை அடையாளப்படுத்தத் தவறிவிட்டனர். இதன் விளைவாக, இந்த ஊழியர்களைக் கண்டுபிடிப்பதற்காக வீட்டுக்கு வீடு இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.    இந்நிலையில், மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலுக்கான மூலத்தைக் கண்டறிய, சுகாதாரப் தரப்பினரும், பாதுகாப்புத் தரப்பினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Be the first to comment

Leave a Reply