அம்பாறையில் முகக்கவசமின்றி நடமாடத் தடை, சந்தைகள், மதத் தலங்களுக்கு பூட்டு!

இன்று முதல் இரு வாரங்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் முகக்கவசமின்றி நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வெளியேறும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

அம்பாறை மாவட்ட அரசஅதிபர் டி.எம்.எல்.திசாநாயக்க தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொவிட்19 பாதுகாப்பு தொடர்பான அவசர விசேட மாநாட்டில் இதுபற்றி தீர்மானிக்கப்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களாவன:

சகல டியூட்டரிகளும் மூடப்பட வேண்டும். அதே போல் பிரதான சந்தைகளும் பூட்டப்பட வேண்டும். அதற்குப் பதிலாக முன்னர் கொரோனா முதலாவது அலை வந்த நேரம் எப்படி மைதானம் மற்றும் வீதியின் இரு மருங்கிலும் கடைகள் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டதோ அப்படி இயங்க வேண்டும்.

சகல மதவழிபாட்டு தலங்களும் மூடப்பட வேண்டும். முக்கிய மதச்சடங்காக இருந்தால் குறித்த மதத் தலைவர் (பூசகர், பிக்கு, மௌலவி, போதகர்) ஓரிருவருடன் சமயச் சடங்கை நடத்தலாம். வழிபாட்டிற்காக பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பஸ்ஸில் வான்களில் நின்று பயணிப்பதற்கும் தடை. ஆசனத்தில் அமர்ந்து சுகாதார நடைமுறைகளுடன் பயணிக்கவே அனுமதிக்கப்படும். மேலும் அம்பாறை கச்சேரியில் கொரோனா செயற்பாட்டு அறையொன்று 24மணி நேரமும் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி, பொலிஸ் சுகாதாரப் பிரிவினர் ஆகியோர் இருப்பர்.

ஓரிருதினங்களில் மாவட்டத்தில் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தத்தம் பிரதேச வளங்களுக்கேற்ப கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதிப்பதற்காக அவசரக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர், சுகாதார வைத்தியஅதிகாரி, உள்ளுராட்சி மன்றத் தலைவர், பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் இக்கூட்டத்தை கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் உள்ள மக்கள் தகவல் தருபவர்களாக மாற வேண்டும். யாராவது வெளியூரிலிருந்து வந்தால் உடனடியாக அறியத் தர வேண்டும். அதற்கான அறிவித்தலை பொலிசார் பிரதேச செயலகத்தினர் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply