தென்னிலங்கையின் ஒரு பகுதியில் மீண்டும் லொக்டவுன் அமுலில்?

தென்னிலங்கையின் சில பகுதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ரஷ்ய பிரஜை சென்றுள்ளமையினால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த ரஷ்ய நாட்டவர் மாத்தறையிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்றதன் காரணமாக அந்த நகரத்தை தனிமைப்படுத்துவது தொடர்பில் சுகாதார பிரிவு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இந்த விடயத்தை கூறியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த கொரோனா தொற்றாளர் மற்றும் அவரது நண்பர் மாத்தறை நகரத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிக்கு முச்சக்கர வண்டியில் சென்றுள்ளதாகவும் அவருக்கு அருகில் பயணித்தவர்களை தற்போது வரையில் பொலிஸார் தேடி வருகின்றனர்.

இதேவேளை இந்த ரஷ்ய நாட்டவர் தங்கியிருந்த ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் உட்பட 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான இந்த ரஷ்ய நாட்டவர், மாத்தறை நகரத்தின் பொல்ஹேன பிரதேசம் முழுவதும் சுதந்திரமாக சுற்றித் திரிந்துள்ளமை உறுதியாகியுள்ளது.

இதேவேளை, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இந்த ரஷ்ய நாட்டு குழுவினர் தனிமைப்படுத்தப்பட்ட விடயம் அறிவிக்கப்படவில்லை என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கையில் மீண்டும் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply