நேரடியாக சன் டிவியில் வெளியாகும் சுந்தர். சியின் திரைப்படம்…

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் சுந்தர் சியின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் அவரது உதவியாளராக இருந்தவரும் ‘வீராப்பு’, ‘தம்பிக்கு எந்த ஊரு’ மற்றும் ‘தில்லுமுல்லு’ ஆகிய படங்களை இயக்கிவருமான பத்ரி இயக்கத்தில் ஒரு திரைப்படம் தயாராகிவருகிறது. இந்த திரைப்படம் கன்னடத்தில் சூப்பர்ஹிட்டான ‘மாயாபஜார் 2016’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இந்த நிலையில் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாது எனவும் இணையதளத்திலும் வெளியாகாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. வரும் தீபாவளி அன்று இந்த படம் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் கூறுகின்றது.

ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பாகிய ‘மலர்கள்’, ‘ஆடுகிறேன் கண்ணன்’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களை இயக்கியவர் பத்ரி என்பதால் அவருக்கும் சன் டிவிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசன்னா, ஷாம், அசோக் செல்வன் ஆகிய மூன்று கதாநாயகர்கள் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். ஸ்ருதி என்பவர் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு சத்யா இசையமைக்கின்றார்.

Be the first to comment

Leave a Reply