ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொரோனா வைரஸ் சூழ்நிலையை காரணங்காட்டி வேலைத்தளங்கள் மற்றும் நிறுவனங்களில் ஊழியர்கள் தன்னிச்சையாக வேலை நீக்கம் செய்யப்படுவது தொடர்பில் தொழில் அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது.

அமைச்சுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு இணங்க அது தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுவரை தமக்கு 50க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், அந்த முறைப்பாடு தொடர்பிலும் அது தொடர்பில் இதுவரை தொழில் திணைக்களம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் தமக்கு தனித்தனியே அறிக்கைகளை பெற்றுத்தருமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

எந்தவொரு ஊழியரையும் வேலைநீக்கம் செய்வதில்லை என கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தொழிலாளர் செயலணி கூட்டத்தின்போது தொழில் வழங்குனர்கள் இணக்கம் தெரிவித்துள்ள நிலையில் அதனை மீறி தற்போது பல நிறுவனங்கள் தமது ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளன. இது ஏற்றுக்கொள்ள முடியாது.

அது தொடர்பில் தொழிற்சங்கங்கள் முறைப்பாடு செய்துள்ளன. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளை, கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக அரசாங்கமானது இந்த மாதம் வரை தமது ஊழியர்களுக்கு அரைச் சம்பளம் வழங்குவதற்கான அனுமதியை நிறுவனங்களுக்கு வழங்கி இருந்தது.

அந்த நிலையில் அதனை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்குமாறு தொழில்வழங்குனர்களின் சங்கம் விடுத்த வேண்டுகோளை தொழில் அமைச்சர் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply