’20’ ஐ வரைந்தவர் யார் என்று சொல்ல ஆளுந்தரப்புக்கு முதுகெலும்பு இல்லை:சஜித் அணி!

அரசால் கொண்டுவரப்பட்டுள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்த வரைவை உருவாக்கியவர் யார் என்பதைக் கூறும் அளவுக்கு ஆளும் தரப்பினருக்கு முதுகெலும்பு இல்லை.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்தார்.

இதேவேளை, ஜனநாயக ஆட்சி முறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தி , சர்வாதிகார ஆட்சிக்கான ஏற்பாடுகளைக் கொண்டமையப்பட்டுள்ள 20ஆவது திருத்த வரைவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் ஒத்துழைப்பை வழங்காது என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“புதிய அரசமைப்பைத் தயாரித்து வருவதாகவும், அதுவரையிலேயே 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக்கொள்ளப் போவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

சர்வாதிகார ஆட்சிக்கான வழிவகைகளே 20ஆவது திருத்தத்தில் காணப்படுகின்றன. இந்தநிலையில் மக்களின் உரிமைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 20ஆவது திருத்தத்துக்கு நாங்கள் ஒருபோதும் ஒத்துழைப்பை வழங்கமாட்டோம்.

குறைந்த பட்சம் ‘வியத்மக’ அமைப்பினரிடமாவது இந்தத் திருத்தம் தொடர்பில் அரசு விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” – என்றார்.

Be the first to comment

Leave a Reply