பிரதமர் மஹிந்தவிடம் கையளிக்கப்படவுள்ள முக்கிய பரிந்துரைகள்!

ஆளும்; மற்றும் எதிர்க்கட்சி மாத்திரமல்லாமல் சர்வதேசத்திலும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள 20வது அரசியலமைப்பு திருத்த யோசனை தொடர்பில் ஆராயும் குழு இன்று அதன் பரிந்துரைகளை பிரதமரிடம் கையளிக்கவுள்ளது.

இந்தநிலையில் அந்த பரிந்துரைகள் நாளை அமைச்சரவையின் முன் சமர்ப்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

20 வது அரசியல்அமைப்பு திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைத்துள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு அமைச்சர் ஜிஎல் பீரிஸே தலைமையேற்றுள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் ஜிஎல் பீரிஸ், புதிய அரசியலமைப்பு என்பது காலத்தின் தேவை என்று குறிப்பிட்டார்.

40 ஆண்டுகளுக்கும் மேலான இலங்கையின் அரசியலமைப்பு சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வரவில்லை.

இந்தநிலையில் புதிய அரசியலமைப்பில், தேர்தல் முறையை சீர்திருத்துவதற்கு முன்னுரிமை கிடைக்கும் என்று அமைச்சர் பீரிஸ் கூறினார்.

இன்று, வாக்காளர்கள் தங்கள் குறைகளை எடுத்துக்கூற,தம்மால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை சந்திப்பதே கடினமான காரியமாக மாறியுள்ளது.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் முழு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதே இதற்கான காரணமாகும். எனவே பிரதிநிதி ஒருவர் ஒரு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும், இதன்போதே அவரால் தமது தொகுதியில்; உள்ள மக்களின் அவலங்களை கவனிக்க முடியும், ‘என்று அமைச்சர் பீரிஸ் கூறினார்.

Be the first to comment

Leave a Reply