வைத்தியசாலைக் கழிவுகள் தொடர்பில் பகிரங்கப்படுத்தி மலையுடன் மோதாதீர்கள்! எச்சரிக்கை விடுத்த நிர்வாகம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் தமது ஆளுகையின் கீழ் உள்ள மயானத்தில் கொட்டியதற்கு எதிராக நல்லூர் பிரதேச சபை நாளைய தினம் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தவிசாளர் த. தியாகமூர்த்தி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அரச மருத்துவமனைகளின் செயற்பாடுகள் வேலியே பயிரை மேயும் கதையாக மாறியுள்ளது. செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்திற்குள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் டிப்பர் வண்டிகளில் ஏற்றி வந்து புதைப்பதை நாம் அவதானித்ததால் அந்த செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட்டது.

போதனா வைத்தியசாலையில் பயன்படுத்தப்பட்ட மருந்துக்களின் கழிவுகள் , வெற்றுப் போத்தல்கள் , ஊசிக் கழிவகள் என பெரும் தொகையானவை 4 டிப்பர் வண்டிகளில் ஏற்றி வரப்பட்டு எமது ஆளுகையில் உள்ள குறித்த மயானத்தில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் பாரிய குழி தோண்டப்பட்டு அக் குழியிலே கழிவுகளை கொட்டியுள்ளனர்.

இவ்வாறு கொட்டிய கழிவினை நல்லூர்ப் பிரதேச சபை அவதானித்து போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இதனை பகிரங்கப்படுத்த வேண்டாம் அவ்வாறு பகிரங்கப்படுத்தி மலையுடன் மோதவேண்டாம் எனவும் அச்சுறுத்தும் தொனியில் தெரிவித்தனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு குழியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை மூடுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் தற்காலி ஊழியர்கள் நால்வர் மயானத்தில் நின்ற சமயம் எம்மால் மடக்கிப்பிடிக்கப்பட்டனர். அதன் போது இது தொடர்பில் அவர்களிடம் வினவிய போது வைத்தியசாலையில் பணியாற்றும் உத்தியோகத்தரின் அறிவுறுத்தலின் பெயரில் அங்கிருந்து ஏற்றி வந்த கழிவினை மூடுமாறு அனுப்பி வைக்கப்பட்டோம் எனக் கூறுனர்.

சபையின் ஆளுகைக்குட்பட்ட விவசாய நிலத்தை அண்டியுள்ள மயானத்தில் இவ்வாறு சுகாதாரத்திற்கு ஆபத்தான மருத்துவக் கழிவுகளை பொறுப்பற்ற விதத்தில் திருட்டுத்தனமாக கொட்டி ஊருக்கும் மாவட்டத்திற்கும் பெரும் அழிவிற்கு காரணமாக செயல்படும் இச் செயல்பாட்டிற்கு எதிராக நல்லூர்ப் பிரதேச சபையின் சார்பில் நாளை வழக்கு தொடுக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply