தேசிய அரங்கில் முக்கிய கோரிக்கைகளை நான் முன்வைத்துள்ளேன் – மனோ

அரசியலமைப்பு குழுவில் மலையக பிரதிநிதி இடம்பெறுவது தொடர்பிலும், நஷ்டமடையும் தோட்டங்கள், சிறு தோட்டங்களாக மறுசீரமைப்பு செய்யப்படுவது தொடர்பான எமது கோரிக்கைகளுக்கு அரசாங்கமும், இ.தொ.காவும் பதில் கூற வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இது பற்றி மனோ எம்.பி மேலும் கூறியுள்ளதாவது,

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற வகையில், மலையக தமிழ் மக்கள் தொடர்பில், கடந்த இரு வாரங்களுக்குள் இரண்டு முக்கிய கோரிக்கைகளை நான் தேசிய அரங்கில் முன் வைத்துள்ளேன்.

அரசியலமைப்பு குழுவில், ஏனைய சகோதர இன பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பதை போன்று மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் .

இரண்டாவது, பெருந்தோட்டங்களை சிறு தோட்ட முறைமைக்குள் கொண்டு வந்து காணிகள் பிரித்து வழங்கப்படும் உத்தேச திட்டத்தில், தோட்ட தொழிலாளர்களையும் பங்காளிகளாக்கி அவர்களுக்கும் காணிகள் வழங்க வேண்டும்.

இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் இ.தொ.கா மெளனமாக இருக்கின்றது. இவை பற்றி நடைபெற்றுள்ள உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் இ.தொ.கா பிரதிநிதிகளுக்கு கலந்துக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படக்கூட இல்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதே தோட்டத் தொழிலாளருக்கு உறுதியளித்த ஆயிரம் ரூபா சம்பளம் போன்று இவையும் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றார்.

Be the first to comment

Leave a Reply